புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து..



வேளாண் பணிகள் தொடங்கும் நிலையில்,  கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மு.சுப்பையா. புதுக்கோட்டையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து உர விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் அனைத்து உர விற்பனையாளர்களும் மூட்டைகளில் குறிப்பிடப்பட்ட விலையிலேயே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்- புகார் பெறப்பட்டால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) எஸ். ராஜசேகரன் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதும் குற்றமாகும். எனவே, உர விற்பனையாளர்கள் நம்முடைய மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் உரங்களை விற்பனை செய்திட வேண்டும். உரக் கடையிலுள்ள உரங்களின் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த விவரங்களை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகைகளில் எழுதி வைக்க வேண்டும்.

தரக் கட்டுப்பாட்டு அலுவலர் முகமது ரபி பேசியது: விவசாயிகளின் ஆதார் அட்டை எண்ணைப் பதிவு செய்து கொண்டுதான் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரிய விற்பனை ரசீது இன்றி யாருக்கும் உரங்களை விற்பனை செய்யக் கூடாது.

இருப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தின்போது, பழுதடைந்த விற்பனை முனையக் கருவிகளும் பழுதுபார்க்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் இருந்தும் உர விற்பனையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments