புதுக்கோட்டை மாவட்டத்தில் அழிந்து வரும் கபடி விளையாட்டு



புதுக்கோட்டை மாவட்டத்தில் அழிந்து வரும் கபடி விளையாட்டை தற்காலத்திற்கு ஏற்றார்போல் ஆடுகளங்களை மேம்படுத்தி, வீரர்களுக்கு நிதிஉதவி அளித்து கபடி விளையாட்டை வளர்த்தெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் பழமையான விளையாட்டு கபடி விளையாட்டு. இது தமிழர்களின் வீர விளையாட்டாகும். கிரிக்கெட் விளையாட்டுக்கு அடுததபடியாக இந்திய மக்களிடையே தேச உணர்வை தூண்டும் பிரபல விளையாட்டாக மீண்டும் உருவெடுக்க துவங்கியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்ததைபோல் இந்தியாவில் சமீபத்தில் நடந்த உலக கபடி போட்டியை தொலைகாட்சியில் பார்த்து வருகின்றனர்.

 இந்நிலையில் புதுக்கோட்டையில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, மணல் தரையிலும் புழுதி பறக்க கபடி விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கபடி எப்போதும் பிரபலம்தான். சுமார் 200-க்கும்  மேற்பட்ட கபடி குழுக்கள் உள்ளன. இதில் உள்ள வீரர்கள் சின்ன சின்ன போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தமிழகத்தில் கபடி என்றால் தஞ்சைக்கு அடுத்து புதுக்கோட்டை என்ற நிலை இருந்தது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திறமையான கபடி விளையாட்டு வீரர்கள் விளையாடியுள்ளனர்.குறிப்பாக திருமயம் பகுதியில் சேகர்பாண்டி, முத்துராமன், அகரப்பட்டி சிதம்பரம், இலுப்பூர் கண்ணன், ராப்பூசல் மணி, தன்ராஜ், கதிர்வேல், குருசாமி, அவ்வையார்பட்டி மதி, மண்டையூர் சுருளி, மின்னாத்தூர் செழியன், திம்மயம்பட்டி சொக்கலிங்கம் ஆகியோர் மாவட்டத்தில் சிறந்த வீரர்களாக வலம் வந்துள்ளனர். இவர்கள் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் அந்த அணி வெற்றி கண்டுள்ளது.

இந்த வீரர்களுக்கு அப்போது போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் ஒரு கால கட்டத்திற்கு பிறகு கபடி போட்டியை விட்டு விட்டு குடும்பத்தை காப்பாற்ற கிடைத்த வேலையையும், தெரிந்த தொழிலையும் செய்ய தொடங்கினர். இதில் ராப்பூசல் மணி இறந்துவிட்டார். இவர்களும் தங்களின் குடும்பச் சூழ்நிலையால் இவர்களுக்கு பிறகு வந்த கபடி விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு வழிகாட்ட தவிறி விட்டனர். அரசும் இதனை கண்டுகொள்ளவில்லை.

 தற்போது பெரிய குரும்பப்பட்டி நாகமுத்து, அவருடைய தம்பி சுரேஷ் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் சிறந்த வீரர்களாக விளையாடி வந்தனர்.

 மேலும் நாகமுத்து, சுரேசை தவிர மற்ற வீரர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே சிறப்பாக நீடித்த விளையாட முடியவில்லை.

 இதில் நகாமுத்து மாநில அளவிலான ஒரு சில போட்டிகளில் விளையாடினார். அதற்கு மேல் அவரால் செல்லமுடியவில்லை. தற்போது சுரேஷ் சிறப்பாக பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றார். இவர் திருச்சி சரகம் போலீஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றார்.

 இந்த வளர்ச்சிதான் புதுக்கோட்டை மாவட்டத்தின் கபடி விளையாட்டின் வளர்ச்சியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தற்காலத்திற்கு ஏற்றார்போல் கபடி விளையாட்டு மைதானம் அமைப்பதில்லை. போதிய ஊக்குவிப்பு அரசு செய்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீண்டும் வளர்த்தெடுக்க வீரர்கள் வலியுறுத்தல்தற்காலத்திற்கு ஏற்றார்போல்ஆடுகளம், பயிற்சியாளர்கள் இல்லை  இது குறித்து முன்னாள் கபடி வீரர் தன்ராஜ் கூறியதாவது:

நாங்கள் விளையாடிய காலத்தில் பணத்தை ஒரு பொருட்டாக பார்ப்பதில்லை. எந்த போட்டியானாலும் நாங்கள் விளையாடும் அணியை வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. இதனால் காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் பயிற்சி மேற்கொண்டோம். இதனால் தொடர்ந்து வெற்றி பெறமுடிந்தது. மாவட்டத்தை விட்டு வெளியே அழைத்துச்செல்ல அரசு சார்பில் அப்போதைக்கு போதிய வழிகாட்டுதல் இல்லை. எங்களுக்கும் கபடி விளையாட்டில் மாநில அளவில் சென்றால் இந்திய அளவில் விளையாடலாம் என்றும் தெரியாது.

 தற்போது உள்ள புரோ கபடிபோல் அப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வீரர்கள் பங்கேற்றிருப்பார்கள்.

கபடி போட்டி என்று போஸ்டர் ஒட்டிவிட்டால் அதனை பார்த்த நாள் முதல் போட்டி ஆரம்பிக்கும் நாள் வரை தொடர்ந்து பயற்சி செய்வோம். ஆனால் தற்போது விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யாமல் நேரடியாக களத்தில் இறங்குகின்றனர்.

 இதனால் அவர்களால் சோபிக்க முடியாமல் போகின்றது. இதனால் இவர்கள் மாவட்டத்தைவிட்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றால் தோல்வியை தழுவுகின்றனர்.

 இவர்களால் ஒரு மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற முடியாது. இதற்கு முக்கிய காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலத்திற்கு ஏற்றார்போல் போதிய  மேம்படுத்தபட்ட மைதானம் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லை. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments