சென்றது புல்லட்டில்; சீட் பெல்ட் போடலன்னு ஃபைன்!- வாகன ஓட்டியைப் பதறவைத்த புதுக்கோட்டை போலீஸ்



புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரபு(31). இவர் தனது மனைவியுடன் பிள்ளையார் பட்டிக்குச் சென்று விட்டு தனது புல்லட் வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காரைக்குடி -அறந்தாங்கி பிரதான சாலையில் புதுப்பட்டி அருகே போலீஸார் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி ராஜபிரபுக்கு ரூ.100 அபராதம் விதித்து போலீஸார், பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது ஒன்றையும் அவரிடம் கொடுத்தனர்.

அபராதத்தைக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து ரசீதைப் பார்த்த ராஜபிரபு, அதிர்ச்சியடைந்தார். சீட் பெல்ட் அணியவில்லை என்று அதில் இருந்தது. அதைத் தனது முகநூல் பக்கத்தில் ராஜபிரபு பதிவிடவே, இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதுபற்றி ராஜபிரபு கூறும்போது, `ஹெல்மெட் போடாம ரொம்ப தூரம் குடும்பத்தோடு டூவீலர்ல போனது தவறுதான். எப்பவும் ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் வெளியில் கிளம்புவேன்.

ஆனால், அவசரத்துல மறந்து போயிட்டேன். ஆனாலும், தவறுக்காக ஃபைன் கட்டிட்டு வந்துவிட்டேன். அவங்க கொடுத்த ரசீதுல சீட் பெல்ட் போடாததுக்கு ஃபைன்னு போட்டு இருந்துச்சு. நான் செஞ்ச தவறுக்கு ஃபைன் கட்டிட்டேன். அதிகாரிகள் செஞ்ச தவறை உடனே எடுத்து ஃபேஸ்புக்ல போட்டேன். மேலும், ஸ்கூட்டில போனதுக்கு சீட் பெல்ட் போடலைன்னு அபராதம் போட்டாங்கன்னு சில ஃப்ரண்ட்ஸ் சொல்லி கமென்ட் போடுறாங்க. இந்தக் காசு யாருக்குப் போகுதுன்னு தெரியலை. பக்கத்துலதான் வீடு இருக்கும், கடைக்குப் போயிட்டு வந்திருப்போம்.

ஆனாலும், ஃபைன் போடுவாங்க. ஹெல்மெட் இல்லையா, லைசென்ஸை எடு, ஆர்சி புக்க எடுன்னு எப்படியாவது காச புடுங்காமவிட மாட்டாங்க" என்றார்.

காவல்துறை அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டபோது, ``வழக்கமாக வரும் புகார்களை விசாரிக்கவே காவல் நிலையத்தில் எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஏற்கெனவே, ஆள் பற்றாக்குறை வேறு. ஆனாலும், இதுபோன்று வாகன சோதனைகளில் நாங்கள் ஈடுபட வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடமிருந்து வாய்மொழி உத்தரவு வருகிறது. கூடுதல் பணிச்சுமையால் அவ்வப்போது, இதுபோன்று ஒன்றிரண்டு தவறுகள் நடைபெறுகிறது" என்றனர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments