புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்புபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க கறம்பக்குடி தாலுகா சேவகன் தெருவை சேர்ந்த பெரியதம்பி (வயது 71) என்பவர் மனைவி சின்னபொன்னுடன் வந்தார். இந்தநிலையில் திடீரென்று பெரியதம்பி ஒரு பாட்டிலில் கொண்டுவந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிராம உதவியாளரின் தந்தை எனது பெயரையும், அவரது தந்தை பெயரையும் சேர்ந்து கூட்டுப்பட்டாவாக உத்தரவு பெற்று உள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு நான் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், கறம்பக்குடி தாசில்தார் மற்றும் நில அளவையர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, இந்த இடம் எனக்கு சொந்தமானது எனக்கூறி, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து எனது பட்டா இடத்தை கிராமஉதவியாளரின் தந்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது தொடர்பான நான் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை கிராமஉதவியாளரின் தந்தை எனது இடத்தில் செய்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் மூலம் அகற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

Post a comment

0 Comments