வேளாண் திட்ட அமலாக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முன்னிலை .



விவசாயிகளுக்கான மத்திய அரசின் 3 திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம்தான் முன்னிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 409 மி.மீ. நிகழாண்டில் தற்போது வரை பெய்துள்ள சராசரி மழையளவு 336.80 மி.மீ. மட்டுமே.
அதேபோல, செப்டம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழைப்பொழிவு 92.80 மி.மீ. ஆனால் நிகழாண்டில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை 162.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நிகழாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,368 ஹெக்டேரில் நெல்லும், 1,603 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 1,297 ஹெக்டேரில் பயறுவகைகளும், 4,303 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும், 1,712 ஹெக்டேரில் கரும்பும், 8,868 ஹெக்டேரில் தென்னையும், 15 ஹெக்டேரில் எண்ணெய்ப்பனையும் பயிரிடப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 211.07 டன் நெல் விதைகளும், 50.332 டன் சிறுதானிய விதைகளும், 1.116 டன் எள் விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தரமான விதைச்சான்று அளிக்கப்பட்ட இந்த விதைகளை வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7,200 விவசாயிகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இலக்கை விஞ்சி 8,212 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னைக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 5,720 விவசாயிகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 9,510 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கும் திட்டத்தில் 1.20 லட்சம் விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 92,683 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மூன்று திட்டங்களிலும் மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் தான் முன்னிலையில் உள்ளது என்றார் உமாமகேஸ்வரி.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, வேளாண்துறை இணை இயக்குநர் மு. சுப்பையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி, மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், தோட்டக்கலைத் துணை இயக்குநர் அருணாசலம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments