புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்



புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் ஏறத்தாழ 47,000 ஹெக்டேர் பரப்பில் நடவு முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று உணவு உற்பத்தியினை அதிகரிக்க முன்வர வேண்டும்.

 அவற்றில் குறிப்பாகத் திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

 திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான, சான்று பெற்ற, உயர்விளைச்சல், வீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதைகள் போதுமானதாகும். மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலித்தீன் தாள்களைப் பரப்பி மரச்சட்டங்கள் வைத்து அதில் மண்ணையும் தொழுஉரத்தையும் கலந்த கலவையை நிரப்பி விதைக்க வேண்டும்.

 துல்லிய சமன் செய்யும் கருவியைப்  பயன்படுத்தி வயலைத் தயார் செய்திடல் வேண்டும். 10 முதல் 14 நாள்கள் வயதுடைய இளநாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு, தலைச்சத்து, உரமிடுதல், சீரான தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் மகசூல் பெறலாம்.

Post a Comment

0 Comments