புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.. கலெக்டர் பேச்சுவிவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக பாரம்பரிய விதைத்திருவிழாவில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரியில் உள்ள இயற்கை விவசாய உற்பத்தியாளர் சார்பில் பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பாரம்பரிய விதைத்திருவிழாவை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகள், வேளாண்மைத்துறையின் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெறலாம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக உற்பத்தியை பெறும் வகையில் பாரம்பரிய விதைத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் மூலம் தரமான பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகளின் அலுவலர்கள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருகிறார்கள். விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் வேளாண்மை இடுபொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா, நபார்டு வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ, புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஆதப்பன், இயக்குனர் தனபதி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பாரம்பரிய விதைகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments