புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் பரவி வரும் விஷ காய்ச்சல்



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் விஷ காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் டெங்கு அறிகுறிகளுடன் தி.மு.க. பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானபேர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூர், ரெகுநாதபுரம், வானக்கன்காடு, பாப்பாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்தநிலையில் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் வசிக்கும் தி.மு.க. வட்ட பிரதிநிதி போஸ்குமார் (வயது 40) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் போஸ்குமாருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போஸ் குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கறம்பக்குடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனால் பருவமழை தொடங்கும் காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வேகமாக பரவும் காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே காய்ச்சலை கட்டுப்படுத்த கறம்பக்குடி பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Post a Comment

0 Comments