சென்னையில் 543 பேருக்கு டெங்கு காய்ச்சல்



தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது. நேற்று முன்தினம் புள்ளி விவரத்தின்படி 543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நகரங்களை காட்டிலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இதுவரையில் டெங்கு பாதிப்பால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது. நேற்று முன்தினம் புள்ளி விவரத்தின்படி 543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாகும்.

சென்னையை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 272 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 173 பேரும் கோவையில் 159 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் 42 சுகாதார மாவட்டத்தில் 10 மாவட்டத்தில் 100-க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

சென்னையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு டெங்கு அறிகுறியால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் 500-க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் உயிர் இழப்பு அதிகளவு இல்லை என்றாலும் டெங்கு ‘பாசிட்டிவ்’ கேஸ் அதிகமாக இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க புகை அடிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்து இருந்து வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் வரும் குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டு மருத்துவக் குழு 24 மணிநேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. காய்ச்சலை முற்ற விட்டுவிட்டு தாமதமாக வருவதால்தான் உயிர் இழப்பு ஏற்படக்கூடும்.

டெங்கு கொசுக்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நல்ல தண்ணீரில் இருந்து உருவாகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தால் கொசுக்கள் உற்பத்தி ஆகாது.

தண்ணீர் வைத்துள்ள குடம், பாத்திரம் போன்றவற்றை மூடி வைக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்படைந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments