டெங்கு காய்ச்சல் அறிகுறியும் வீட்டு மருத்துவமும்!!தலைவலியா.. வயிறுவலியா.. மூட்டுகளிலும் வலி பாடாய்ப்படுத்துகிறதா? கூடவே காய்ச்சலும் சோர்வும் விரட்டுகிறதா? சுய வைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள். இவை டெங்குவாகவும் இருக்கலாம்.

கசப்பான பப்பாளிச்சாறுதான் டெங்குவை விரட்டும் அருமையான நல்மருந்தாக செயல்படுகிறது.

சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிகொண்டால் கொசுவின் கடியிலிருந்து தப்பிக்கலாம்.

டெங்கு.. உயிரைக்கொல்லும் நோய் மீண்டும் தலை தூக்க தொடங்கியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத் தின் கணக்குப்படி உலக மக்கள் தொகையில் பாதி பேர் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ் நோய்களுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது.

கொசுக்களால் உண்டாகும் காய்ச்சல் பரவலாகவே அதிகம் என்றாலும் கடந்த சில வருடங்களாக ஏடிஸ் என்னும் கொசுவகைகள் ஆளைக் கொல்லும் தீவிர காய்ச்சலான டெங்கு காய்ச்சலை உருவாக்கி வருவதைக் அறிந்து வருகிறோம். சுகாதாரமான தூய்மையான இடங்களில் இருக்கும் நன்னீரில் இந்தக் கொசுக்கள் முட்டையிட்டு வருகிறது.

டெங்கு

ஏடிஎஸ் என்னும் கொசு கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. வைரஸ் கிருமியால் வரும் இந்நோயை உருவாக்கும் கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரும். இவை பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும்.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள்

எல்லா காய்ச்சலுமே டெங்கு காய்ச்சல் என்று சொல்ல முடியாது. டெங்கு காய்ச்சல் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் வரை குறையாமல் இருக்கும். கடுமையான காய்ச்சலுடன் தொடங்கும் டெங்கு காய்ச்சல் வந்தால் வயிற்று வலி, தலைவலி, உடல்வலி, உடல் சோர்வு, உடல் மூட்டுகளில் தொடர்ச்சியான வலி, வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். காய்ச்சல் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் இருக்கும்.

சிலருக்கு சாதாரண காய்ச்சல் போன்று இருக்கும். ஆனால் இரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய தட்டணுக் களை (வெள்ளை அணுக்களை) அழித்து அதன் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். இதனால் சிறுநீர்ப்பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும். இப்படி உதிரப்போக்குடன் உண்டாகக்கூடிய டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தினால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருந்தால் ஏழு நாட்களில் சரியாகிவிடும். வெகு சிலருக்கு காய்ச்சல் மட்டும் குறைந்திருக்கும். ஆனால் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். உடலில் கை, கால்கள் சில்லிட்டுப் போகும். சிலருக்கு சுய நினைவை இழக்கும் அபாயத்துக்கும் அழைத்துச்செல்லும்.

உங்களுக்கு காய்ச்சல் வரும்போது கை மருத்துவம் பலனளிக்காத பட்சத்தில் அவை தொடர்ந்திருக்கும் போது டெங்குவிற்குரிய பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையுடன் செய்துகொள்வது நல்லது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நோய் தாக்குதலுக்கு உள்ளான உடன் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்கலாம். தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் வயிறு வலி, தலை வலி,வாந்தி, மூட்டு வலி இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகுவது நல்லது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது இருக்கட்டும். டெங்கு காய்ச்சலை வராமல் தடுக்க வீட்டு வைத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம். இது பக்கவிளைவுகளை உண்டாக்காது . காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இயற்கை வைத்தியத்தையும் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு மாத்திரைகளுடன் இயற்கை வைத்தியமும் சிறந்த தீர்வாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி என்ன இருக்கு பார்க்கலாமா?

பப்பாளி

அதிக விலை கொடுத்து தான் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்பதில்லை. எளிதாக அனைவருக்கும் கிடைக்க கூடிய சத்துமிக்க பப்பாளி டெங்கு காய்ச்சலில் அதிகப்படியாக இழக்கும் வெள்ளை அணுக்களை மேலும் இழக்க வைக்காமல் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

பப்பாளி மரத்தின் இலையைச் சுத்தம் செய்து, அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து சாறாக்கி வடிகட்டி மெல் லிய துணியில் பிழிந்து 10 மிலி அளவு குடிக்கலாம். பெரியவர்களாக இருந்தால் பப்பாளி இலையை மைய அரைத்து சிறு கோலிஅளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இவை வெள்ளை அணுக்களின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்கிறது என்பதை அடுத்த பரிசோதனையில் உணரலாம். அதிக கசப்பு மிக்க பப்பாளியைச் சாப்பிடுவது சிரமம் என்றாலும் டெங்கு காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துளசி
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மூலிகையாக செயல்படுகிறது துளசி. காலையில் நீரை கொதிக்க வைத்து அதில் கைப்பிடி அளவு துளசி இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். துளசியை வெறுமனே மென்றும் சாறை விழுங்கலாம்.

நிலவேம்பு குடிநீர்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு பொடியை வாங்கி வந்து காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் பொடி போட்டு கால் டம்ளர் நீராக சுண்ட வைத்து 10 மில்லி குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

அதே நேரம் நிலவேம்பு குடிநீரும் அரசு மருத்துவ மனைகளில் சித்த மருத்துவம் பிரிவுகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. இதையும் வாங்கி குடிக்கலாம்.

வெந்தய இலை
வெந்தயக்கீரையை நீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடிக்கலாம்.வெந்தயத்தைப் பொடித்து தினமும் காலை யில் வெறும் வயிற்றில் அரைத்தம்ளர் நீரில் வெந்தயப்பொடியைக் கலக்கி குடிக்கலாம். இவை காய்ச்சலைத் தாண்டி நீரிழிவு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.

வேப்பிலை

பப்பாளியைப் போன்று வேப்பிலையும் கசப்பு நிறைந்தது. வேப்பிலையை நீரில் கொதிக்கவிட்டு குடித்தால் ரத்தத்தட்டுகள், ரத்தத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரஞ்சு
டெங்கு பாதிப்பு என்பதைக் கண்டறிந்ததும் மருத்துவரின் ஆலோசனையோடு ஆரஞ்சு பழச்சாறை எடுத்து கொள்ளலாம். இதைப் போன்று நார்த்தங்காய், எலுமிச்சை, சாத்துக்குடி,நெல்லிச்சாறும் அருந்தலாம்.
பாலில் மஞ்சள் சிட்டிகை சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

டெங்குவின் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது கொசுக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முறைதான்.

என்ன செய்யலாம்

வீட்டில் சுத்தமான தண்ணீரைச் சேமித்துவைக்கும் குடங்கள், தண்ணீர் நிரப்பி வைக்கும் பாத்திரங்கள், தண் ணீர் டிரம்கள், தண்ணீர்த்தொட்டிகளைச் சுத்தமாக பராமரித்து வைத்திருப்பதோடு அவற்றை மூடி வைப்பது நல்லது.

வீட்டைச் சுற்றிலும் குப்பை தேங்காமல் பார்த்துக்கொள்வதோடு வீணான டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பகல்நேரங்களில் கடிக்கும் இந்த ஏடிஸ் கொசுவை ஒழிக்க வீட்டைச் சுற்றி மட்டுமல்லாமல் வெளி இடங்களிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

வீட்டில் கதவு, ஜன்னல் பகுதிகளுக்கு கொசுவலை அடித்து பயன்படுத்துவது நல்லது. இயன்றவரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் ஏடிஸ் கொசு குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள் தரவேண்டும். குழந்தைகள் பள்ளி செல்வதற்கு முன்பு குழந்தையின் முழங்கால் மூட்டு வரை தேங்காய் எண்ணெய் தேய்த்து அனுப்பலாம். இது கொசுக்கடியிலிருந்து காப்பாற்றும்.

டெங்கு காய்ச்சல் இலேசாக எட்டிப்பார்க்கும் இந்த சூழலில் வீட்டில் இருக்கக்கூடிய மருத்துவகுணமுள்ள மிளகு, பூண்டு...நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடிய நெல்லி, உலர் திராட்சை, கீரைகள், காய்கறிகள், பழங்கள், அசைவ உணவு எடுத்துகொள்பவர்கள் மத்தி ,சால்மன் மீன்... போன்ற பொருள்களை எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளி

இலைச்சாறைக்கூட டெங்கு காய்ச்சல் வந்தால் என்றில்லாமல் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை 10 மில்லி அளவில் எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள் வீட்டிலிருக்கும் பெரியோர்கள். அது போலவே இளங்கொழுந்து வேப்பிலையுடன் பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குழந்தைக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும் என்பதும் வேப்பிலையின் கூடுதல் சிறப்பு.

டெங்குவை வருவதற்கு முன்பு தடுக்க வேண்டுமானால் டெங்கு கொசுவை ஒழிப்பதுதான் சிறந்த வழி.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments