காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம்



அன்னவாசல் ஒன்றியம் திருவேங்கைவாசல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அன்னவாசல் மண்டல அதிகாரி சுருதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு, செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராம சபை கூட்டத்திற்கு முன் சமர்ப்பித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம், போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. அன்னவாசல் ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, சங்கர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அம்மாசத்திரம், சத்தியமங்கலம், மதியநல்லூர், நார்த்தாமலை, பணம்பட்டி, குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், ஈஸ்வரன்கோவில், கோத்திராப்பட்டி, வயலோகம், இருந்திரப்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட 43 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோட்டைப்பட்டினம்

கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஆலமரத்தடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர் அக்பர் அலி, கூட்டுறவு சங்க தலைவர் அலி அக்பர், ஹோஜா பகுருதீன், சரிப் மற்றும் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி, ஆவுடையார்கோவில்

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ஜெனித் தலைமை தாங்கினார். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ராஜே‌‌ஷ் பேசினார். கூட்டத்தில் திருப்பதி நகர் அங்கன்வாடி மையத்துக்கு சிறிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தூய்மை இந்தியா, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு பற்றிய உறுதி மொழிகள் எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர்கள், நூறு நாள் வேலைப்பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில், திருப்பெருந்துறை ஊராட்சியில் கம்பர் நகரில் கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, ஆவுடையார்கோவில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ஜெயபாலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வணங்காமுடி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பெருந்துறை ஊராட்சி செயலர் சுஜாதா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் ஒன்றிய பற்றாளர்கள் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களை வட்டார வளர்ச்சி அதிகாரி குமரன், அரசமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் கிராம சபை கூட்டங்களை மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பார்த்திபன், கிரு‌‌ஷ்ணமூர்த்தி, சுசீலா சண்முகாதேவி ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கைகள் பெற்றனர்.

மணவிடுதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments