கிராமப்புறங்களில் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் கலெக்டர் பேச்சுபுதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு சீரமைத்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

மேலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், தூய்மையே சேவை இயக்கம், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல், பள்ளி கழிவறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிவறைகள், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை மாசுபடுவதை தடுக்க செயல்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்களின் அடிப்படை கோரிக்கையான சாலைவசதி, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலமுரளி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் பரணிதரன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கீரமங்கலம்

கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கைகளை தமிழ்நாட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. நீண்ட கால திட்டமான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு கொடுத்தனர்.

வாக்குவாதம்

கொத்தமங்கலம் ஊராட்சியில் கிராம சபை அலுவலர் தேவிகா தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம இளைஞர்கள் ஊராட்சி சம்பந்தமாக வரவு, செலவு மற்றும் நலத்திட்டங்கள் பற்றியும், ஊராட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதா? வீட்டு வரி செலுத்த முடியவில்லை. அதனால் நலத்திட்டங்கள் பெற முடியவில்லை. எப்போது யாரிடம் வீட்டு வரி செலுத்துவது என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு எற்பட்டது. அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் கூட்டத்திற்கு வந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.

திருவரங்குளம், விராலிமலை

திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. திருவரங்குளம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியம் விராலிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விராலிமலை சந்தைபேட்டையில் சட்டவிரோதமாக செயல்படும் பார் மற்றும் டாஸ்மாக் கடையை மூடவும், அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கசவனூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜூ தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments