அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்



அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் ஏற்கனவே கஜா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கையாண்ட அனுபவம் இங்குள்ள அலுவலர்களுக்கு உள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் தினமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு வானிலை புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அலுவலர்களுக்கு உத்தரவு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் 4 ஆயிரத்து 399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 327 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி கட்டிடங்களில் தரமாக உள்ளதா பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இடி மற்றும் மின்னல் தாக்கும்போது பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்காக 30 ஆயிரம் ஆண்கள், 14 ஆயிரம் பெண்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். பருவ மழையின் தாக்கத்தால் நோய்கள் வராமல் தடுப்பதற்கு சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது டெங்கு பாதிப்பு என்பது குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களுக்கு ஆறுதல்:

தொடர்ந்து முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments