திருச்சியில் இருந்து புறப்பட்ட மலேசிய விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு



திருச்சியில் இருந்து புறப்பட்ட மலேசிய விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் மலேசியா செல்ல தயாரான 87 பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சில நேரங்களில் திருச்சிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரக்கூடிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாகவும் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் தாமதமாக வருவதுண்டு. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானத்தில் பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருவது வாடிக்கையாகி விட்டது.

தொழில்நுட்ப கோளாறு

இந்தநிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு தினமும் காலை 8.55 மணிக்கு திருச்சியில் ஏர் ஏசியா விமானம் வந்து தரையிறங்கும். பின்னர் இங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி செல்லும்.

இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் 8.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு, மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட விமானம் ஆயத்தமானது. அந்த விமானத்தில் செல்லக்கூடிய பயணிகளின் உடைமைகள் அனைத்தும் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

87 பயணிகள் தவிப்பு

இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் மலேசியா செல்லக்கூடிய 87 பயணிகள் விமானத்தில் ஏற்றப்படாமல் விமான நிலைய வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். இதனால், பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். பழுதான விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் தொழில்நுட்ப கோளாரை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன் காரணமாக, 87 பயணிகளும் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவு 10.30 மணிக்கு திருச்சிக்கு வரும் மற்றொரு ஏர் ஏசியா விமானத்தில் 87 பயணிகளும் கோலாலம்பூர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பழுதடைந்த விமானமானது, சரிசெய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் மலேசியா புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments