ஏரி, குளம், குட்டைகளில் உள்ள நீரை குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்ஏரி, குளம், குட்டைகளில் உள்ள நீரை குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்திட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட 130 அலுவலர்கள் அடங்கிய விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

 இக்குழு மழைக் காலம் முடியும் வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேலாய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கையாக அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அப்பகுதி தன்னார்வலர்கள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகவீனங்கள் உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

பொதுமக்கள் தொற்று நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏரி, குளம், குட்டைகளில் உள்ள நீரை குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.

 குடிநீரை நன்கு கொதிக்கவைத்து பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் மற்றும் கழிவறை சென்று வந்த பின்பும் கைகளை சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

மழைக்காலங்களில் எலிகள் மூலம் எலிகளின் சிறுநீரில் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற எலிக் காய்ச்சல் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள வெளியிடங்களில் வெறும் கால்களுடன் நடக்கக்கூடாது. வெளி இடங்களுக்கு சென்று வந்த பின் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய டயர், மண்பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பயன்படுத்தாத வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை மழைநீர் தேங்காமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க வேண்டும். தவறினால் கொசு உற்பத்தி உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் உருவாக காரணியாக இருந்தமைக்கு அபராதம் விதிக்கப்படும்.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படும் பொழுது சுய வைத்தியம், பெட்டிக்கடை, மருந்துக்கடை, மருத்துவர் ஆலோசனையின்றி நேரடியாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்து, நோய் தாக்கம் ஏற்பட்ட அன்றே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே மேற்கண்ட முன் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதுடன், தங்கள் பகுதிகளில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகள் மற்றும் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் உடைப்புகள் மூலம் நீர் மாசுபடுதல் போன்ற புகார்கள் இருப்பின் மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 9013 மூலம் ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கும், 04322 221733 என்ற எண்ணில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனருக்கும் 24 மணிநேரமும் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments