மின் இணைப்பு கட்டணங்கள் வெகுவாக உயர்ந்தது புதிய பட்டியல் அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார வசதியை அதிகரிப்பதற்கு நவீன கட்டமைப்புகளில் ஈடுபடுவது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின்இணைப்பு மற்றும் பல்வேறு சேவை கட்டணங்கள் குறிப்பாக சேவை கட்டணம், பதிவுக்கட்டணம், வளர்ச்சி கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பாதுகாப்பு கட்டணம் ஆகிய 5 இனங்களின் கீழ் உள்ள பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் மனு அளித்தது. இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த மாதம் 25-ந்தேதி சென்னையில் ஆணையம் நடத்தியது.

இதில் மின்நுகர்வோர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள், கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும் என்பன குறித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். அதிகாரிகளும் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள்.

இந்தநிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதிய மின் இணைப்பு கட்டணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வீடுகளுக்கு வழங்கப்படும் தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.250 செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

பொது குடிநீர் இணைப்பு, பொது பயன்பாட்டு விளக்குகளுக்கான கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதே பிரிவில் மும்முனை இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 முதல் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், விசைத்தறி கூடங்கள், குடிசைத்தொழில்கள் உள்ளிட்டவைகளுக்கான புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் அனைத்து பிரிவு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments