120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு! மெய்சிலிர்க்க வைக்கிறார் முல்லைவனம்!



முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல, தன் வாழ்க்கையை, மரங்களுக்காக கொடுத்திருக்கிறார், முல்லைவனம். 'ட்ரி பேங்க்' என்ற, மரவங்கியை துவக்கி, சுற்றுச்சூழலுக்கு சேவையாற்றும் அவர், இதுவரை, 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

''மக்கள் தொகைக்கு ஏற்ப,120 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே, என் லட்சியம்,'' எனக் கூறி, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

அவருக்கு வாழ்த்து சொல்லி பேசியதிலிருந்து...முல்லைவனம் பற்றி?

நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். புத்தகங்களை அதிகம் படிக்கவில்லை. நிறைய மரங்களையும், மனிதர்களையும் படித்திருக்கிறேன். எனக்கு பிடிக்கும் மரங்கள் சூழ்ந்த இயற்கை, அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

மரங்களின் மீதான காதல் வந்த தருணம் எது?

சிறுவயதில், என் தாத்தாவுடன் இணைந்து, வயல்களில் வேலை செய்வேன். அவர், இலை, தழைகள், ஆடு, மாடு சாண எருவை, வயலுக்கு உரமாக்குவார். அவருடன், நானும் இலை, தழைகளை, உழுத வயலில் அமிழ்த்துவேன்.பின், இலைகளற்ற குச்சிகளை, வரப்புகளில் ஊன்றுவேன். சில நாட்களில், அவை, வேர்விட்டு, தழைத்து, ஆடு, மாடுகள் நுழைய முடியாத உயிர் வேலியாக மாறும். குச்சிகள், தழைத்து உருமாறும்போது ஏற்பட்ட உணர்வு களால் தான், மரக் காதலனாக மாறினேன்.

நான் வளர்ந்த போது, வயல்கள் மனைகளாகி, மரம் வளர்ந்த இடத்தில், கட்டடங்கள் வளர்ந்தன. என்றாலும், விதைகளை சேகரித்து, காலியான பால், தயிர், எண்ணெய் டின்களில் மண் நிரப்பி, எருவிட்டு வளர்த்து, இடமுள்ளோருக்கு பரிசளித்தேன். என்னிடம் வந்த பலர், என்னை, பைத்தியம் என்றனர். சிலர், மரக்கன்று தேவை என்றனர்.

நாளுக்கு நாள், மரக்கன்று பெறுவோரின் எண்ணிக்கை பெரிதானது. அப்போது, மண்ணும், உரமும் விலை பொருட்களாகி விட்டன.என்றாலும், மூச்சுக் காற்றை வழங்கும் மரங்களுக்கு, நான் விலை வைப்பதில்லை. அடுத்த சந்ததிக்கு நல்ல காற்றை வழங்க, என், வாழ்க்கையையே மரங்களுக்காக அர்ப்பணித்து விட்டேன்.

உங்களின் மர வங்கி பற்றி?

பத்தாண்டுகளுக்கு முன், நான், 'ட்ரீ பேங்க்' உருவாக்கி, சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று, இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினேன். கன்று வாங்கிய பலர், அதை பாழடித்ததால், இப்போது, வளர்க்கும் சூழலை உறுதிப்படுத்திய பின், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு வழங்குகிறேன்.

மரம் வளர்ப்பில், அரசு மாணவர்களுக்கும், தனியார் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசம்?

அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கி, நட்டு பராமரிப்பர். ஆனால், அங்கு பாதுகாப்பு இருக்காது. விடுமுறை நாட்களில், கால்நடைகள் மேய்ந்தோ, மைதானத்தில் விளையாடுவோராலோ அழிந்து விடும்.

தனியார் கல்வியகங்களில், மண்ணில் கை வைக்கவே, பல மாணவர்களின் கை கூசும். அங்கு, மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டாலே போதும். அவர்கள் இல்லாத சூழலிலும், காவலர்கள் பாதுகாத்து விடுவர்.சுற்றுச்சுவர் இருப்பதால், கால்நடைகளும், வெளியாட்களும் வரமாட்டர்.

மரக்கன்று வழங்குவது மட்டும் தான் உங்கள் பணியா?

விதை சேகரிப்பு, பதியன் போடுதல், போத்து நடுதல், உரம் வைத்தல், களை எடுத்தல், மாடித் தோட்டம் அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்குகிறேன்.

நீங்கள் நட்ட மரக்கன்றுகள் எவ்வளவு?

ஒரு கோடியே, 48 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். அவற்றில், பாதிக்கு மேல் காக்கப்பட்டிருக்கும். நான், எல்லா சூழலுக்கும் தாக்குப்பிடிக்கும், வேம்பு, அரசு, பூவரசு, புங்கன், அத்தி உள்ளிட்ட நாட்டு மரங்களை தான்வளர்க்கிறேன்.நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப, 120 கோடி மரங்களை வளர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

மரக்கன்று வளர்ப்பது சரி; வயிறு வளர்க்க என்ன செய்கிறீர்?

விவசாய கூலி வேலை, தோட்ட வேலை செய்கிறேன். ரேஷன் அரிசி தான், என் வரவுக்கு உகந்ததாக உள்ளது. அவ்வப்போது, கிராமங்களில் குத்தகை நிலங்களில், இயற்கை விவசாயத்தில், காய்கறிகளை விளைவித்து, நானும் உண்டு, நில உடைமையாளருக்கும் கொடுக்கிறேன்.

இயற்கை விவசாயத்தில், பூச்சி தொல்லை இல்லையா?

கஸ்துாரி மஞ்சள், பச்சை மிளகாய், மிளகு ஆகியற்றை, தனித்தனியே அம்மியில் அரைத்து பொடி செய்து, தலா, 50 கிராம் எடுத்து, அவற்றுடன், 50 மி., கோமியம், முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்தால், இயற்கை பூச்சிக் கொல்லி கிடைத்து விடும்.அதை, காலை அல்லது மாலையில், செடியின் மீது தெளித்தால், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

அரசு விழாக்களில், தலைவர் பிறந்த நாட்களில் நட்ட மரங்கள்...

மரக்கன்று வாங்கிய கணக்கு நோட்டும், மழை, புயல், வெயிலில் பாழானதால், மீண்டும் நட்ட வகையில் செலவான தொகைக்கு ஒரு கணக்கு நோட்டும் தான் இருக்கும். அதனால் தான், மரம் நடும் விழாக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

உங்களுக்கு அரசு உதவுகிறதா; உங்களின் தேவை என்ன?

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்னை பாராட்டி விருது வழங்கினார். மற்றபடி, அரசு எதையும் செய்யவில்லை.எனக்கு, மரக்கன்று வளர்க்க நிலம், குழி எடுக்க இயந்திரம், செடி, தண்ணீர் எடுத்துச் செல்ல வாகனம் கொடுத்தால், பசுமைப் போர்வைக்கு தொடர் சேவை வழங்குவேன்.

எதிர்கால சந்ததிக்கு, நாம் அவசியம் விட்டுச் செல்ல வேண்டிய பசுமையை அதிகரிக்க, எதிர்பார்ப்பின்றி, சேவையாற்றி வரும் முல்லைவனத்தை பாராட்டவோ,உதவி செய்யவோ விரும்புவோர்,

94440 04310 என்ற எண்ணில்,அவரை தொடர்பு கொள்ளலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments