கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைத்த எச்சரிக்கை விளக்கு ஒரு மாதத்தில் செயல்படாத நிலை
கட்டுமாவடி, மணமேல்குடி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் பல இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 32 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்தால் மிகவும் பரபரப்பாக காணப்படும்.

இந்தச் சாலையில் அதிகமான சுற்றுலா பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதமும், பொருட்சேதமும் அதிக அளவு ஏற்படுகிறது.

இந்த பகுதிகளில் நடக்கும் விபத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் முக்கிய இடங்களில் குறிப்பாக பேருந்து நிறுத்தங்கள், விபத்து பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், அபாயகரமான வளைவுகள் போன்ற இடங்களில் விட்டுவிட்டு எரியக்கூடிய சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கட்டுமாவடியில் 12 இடங்களிலும், காரக்கோட்டை, கிருஷ்ணாஜிப்பட்டினம், பிள்ளையார்திடல், மும்பாலை போன்ற இடங்களில் வலது மற்றும் இடதுபுறமாக இரண்டு இடங்களிலும், மணமேல்குடியில் 14 இடங்களிலும் இந்த ஒளிரும் சிவப்பு விளக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அருகில் உள்ள மின் கம்பங்கள் மூலமாகவும் மின் இணைப்பு வழங்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் இன்னும் இந்த விளக்குகள் செயல்படாமல் பயனற்று காணப்படுகிறது. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் பல ஆயிரம் செலவு செய்து வைக்கப்பட்டும் எந்த பயனில்லாமல் காணப்படுவதால் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக கட்டுமாவடி கடைத்தெருவில் பட்டுக்கோட்டை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு விளக்கும், மணமேல்குடி சந்தைப்பேட்டை அருகில் வலது, இடது புறமாக உள்ள இரண்டு விளக்குகளும், மணமேல்குடி பள்ளிவாசல் அருகில் இந்தியன் வங்கி எதிர்புறம் உள்ள ஒரு விளக்கும் இன்னும் செயல்படாமல் உள்ளது.

எனவே நெடுஞ்சாலை துறையும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த விளக்குகள் செயல்படாத காரணத்தை கண்டறிந்து மின் இணைப்பு கொடுக்கப் படவில்லையென்றால் மின் இணைப்பு கொடுத்தும், எச்சரிக்கை விளக்குகள் பழுதடைந்து இருந்தால் அதற்கு பதிலாக வேறு விளக்குகள் பொருத்தியும் இப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments