வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நவ.30ம் தேதி வரை நீட்டிப்பு புதிய வாக்காளர் பட்டியல் வரும் பிப்.7ம் தேதி வெளியீடு : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு



தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், என்.எஸ்.வி.பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

திருத்தம் இருந்தால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை என்பதை, அக்டோபர் 15ம் தேதி என்றும், பின்னர் நவம்பர் 18ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்தது.

இப்போது, நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் வருகிற நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

பின்னர் டிசம்பர் 16ம் தேதி முதல் 2020 ஜனவரி 15ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறும். இதையடுத்து 27-1-2020ம் தேதிக்குள் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் அளித்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணிகள் முடிவடையும்.

தொடர்ந்து வருகிற பிப்ரவரி 7ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments