மணமேல்குடி அருகே ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாத கோடியக்கரை சுற்றுலாதளம்



மணமேல்குடி கோடியக்கரையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு சுமார் ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட சுற்றுலா தளம் 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோடியக்கரை உள்ளது.

இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமங்களில் ஒன்று. மணமேல்குடி அருகில் உள்ள இக்கிராமம் “ப’ வடிவில் மூன்று பக்கமும் கடல்சூழ்ந்த பகுதியாகவும், ஒரு பக்கம் மரங்கள் நிறைந்த வனப்பகுதி போன்றும் காட்சியளிக்கிறது.

இலங்கைக்கு பாலம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் கோடியக்கரையும் ஒன்று என்பதாலும் சிறப்பு பெற்றது. ஆழம் குறைந்த இக்கடற்கரையின் அழகை ரசிக்க புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் திருவிழா போல கூட்டம் அலைமோதுவதை காணலாம்.

சுற்றுலா ஸ்தலத்துக்கான அனைத்து தகுதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள கோடியக்கரை கடற்கரை கிராமத்தை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2012 ம் ஆண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் மணமேல்குடி கோடியக்கரையில் சுற்றுலா தளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த மனோகரன், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிகாரிகள் பலர் ஆய்வு செய்தனர். இதன் பின்னரே புதுக்கோட்டை மாவட்டத்திலும் இப்படி ஒரு ரம்மியமானதும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான கோடியக்கரை கடற்கரை கிராமம் இருப்பது சுற்றுலாத்துறைக்கு தெரியவந்தது.

இதையடுத்து கோடியக்கரையை சுற்றுலா ஸ்தலமாக அறிவித்த தமிழக அரசு, சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.95.45 லட்சத்தில் கோடியக்கரையில் காட்சிக் கோபுரம், சுற்றுலா வரவேற்பு மையம், உடை மாற்றும் அறை, கழிவறை, கூடுதல் காத்திருப்போர் அறை, ஆழ்துளை கிணறு, இரும்புக் கம்பி சுற்றுச்சுவர், கோடியக்கரை தார்ச் சாலை புதுப்பித்தல், மேம்பாடு, சிறு பாலம், சிமெண்ட் சாலை போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சிறுவர் பூங்கா பணிகள் சுற்றுலாத் துறை, ஊரக வளர்ச்சித் துறையினரால் ரூ. 20 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பூங்காவில் சுற்றுச்சுவர், சிறுபாலம் அமைத்தல், விளையாட்டு கருவியும், கழிப்பறை அமைத்தல், இளைப்பாறும் கூடம், புல்தரை அமைத்தல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி அந்த ஆண்டின் இறுதியிலேயே நிறைவும் பெற்றது. பணிகள் முடிந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 

அதிலும் குறிப்பாக பெண்கள் சிரமப்படுகிறார்கள். கழிவறைக்கு செல்ல முடியாமலும், உடை மாற்ற முடியாமலும் அவதியுறுகின்றனர். இதேபோல வெயில் மற்றும் மழை காலங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துன்பப்படுகின்றனர். இப்பகுதிகளில் பராமரிப்பு இல்லாததால் குப்பைகளும் பெருகி கிடக்கின்றன. தற்போது இது மது அருந்துவதற்க்காக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகிறது. அங்குள்ள புல்தரைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. பள்ளி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் இப்பகுதிகளுக்கு வருகின்றனர்.

ஆனால் இது திறக்கப்படாததால் அனைவருமே ஏமாற்றத்திற்குள்ளாகி திரும்பி செல்கின்றனர். எனவே ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுற்றுலாத் தலத்தை உடனே திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments