6 மணி நேரம் போதை... பவுடராக்கப்படும் வலி நிவாரண மாத்திரை.. அடிமையாகும் மாணவர்கள்!மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வலி நிவாரண மாத்திரைகளைப் பவுடராக்கி கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஏற்றிக்கொள்ளும் புதுவித போதைப் பழக்கத்தால் இதயச் செயலிழப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்துக்காக எதையும் செய்யத்தயாராக இருப்பார்கள் என்பதால், இவர்களை சில கும்பல்கள் குற்றச் செயல்களிலும் ஈடுபடுத்தி வருகிறது. தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், ``தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, அதைப் போதை ஊசியாக மாற்றி ஏற்றிக் கொள்ளும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் சமீப காலமாக வேகமாகப் பரவி வருகிறது.

இந்தப் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பியதாக புதுக்கோட்டையில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மாணவர்கள் பரவி வரும் இப்பழக்கத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனச் சமீபத்தில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மனநல மருத்துவர் சிவசைலம் அவர்கள் கூறுகையில் ``மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தூக்கம் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளைப் பொடியாக்கி, டிஸ்டில்டு வாட்டரில் (Distilled water) கலக்கிறார்கள். ’டிஸ்டில்டு வாட்டர்’ என்பது, சிகிச்சையின்போது ஆண்டிபயாட்டிக் மருந்துகளை கரைக்க பயன்படக்கூடிய தண்ணீர். இதில் வைரஸ், பாக்டீரியா எதுவும் இருக்காது.

காபியில் தேயிலை வடிகட்ட பயன்படுத்தும் வடிகட்டியில் வடிகட்டி, ஊசி மூலம் ஏற்றிக்கொள்கிறார்கள். முக்கியமாக கழுத்து, கால், கை நரம்புகளில் ஏற்றுகிறார்கள். இதனால், நரம்புகளில் நோய்த் தொற்று அதிகமாகும். தொடர்ந்து இதுபோல பயன்படுத்தி வந்தால், திடீர் இதயச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலைகூட ஏற்படும்.

இந்தப் போதைக்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஊசி போட்டு போதை ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு ஊசிக்கு 200 முதல் 300 ரூபாய் வரை பெற்றுக்கொண்டும் சில கும்பல் ஊசி போட்டு போதை ஏற்றிவிடுகிறது. மது, கஞ்சாவின் போதையைத் தாண்டி 6 மணி நேரம் வரை இந்தப் போதை நீடிக்கும். ஒருவித மிதப்பில் பறந்தபடி இருப்பார்கள். மது அருந்தினால் வாசனை தெரியும். ஆனால், இந்த ஊசியில் எந்தப் போதை வாசனையும் இருக்காது.

போதை ஊசி:
ஆபரேஷன் செய்யும் அளவுக்குக்கூட இந்தப் போதை தாங்கும். பக்கவிளைவுகள், பின் விளைவுகள் தெரியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை ஏற்றிக்கொள்கிறார்கள். போதைக்கு அடிமையாகிவிட்டால் பணத் தேவைக்காக செயின் திருட்டு, வழிப்பறி, கொள்ளைகளில்கூட ஈடுபடத் தயங்க மாட்டார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments