"போதையில் அறையைப் பூட்டிவிட்டார்"! -ரத்தப் பரிசோதனை ஊழியர் செயலால் கொதித்த அறந்தாங்கி மக்கள்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள ரத்தப்பரிசோதனை மையத்தில் பணியாளராக சீனிவாசன் (51) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் எப்போதும் மதுபோதையில்தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை பணிக்கு மதுபோதையில் வந்த சீனிவாசன் ரத்தப்பரிசோதனை நடைபெறும் அறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டுப் படுத்து உறங்கிவிட்டார். அங்கு ரத்தப்பரிசோதனை செய்வதற்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வாசலில் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சக பணியாளர்களின் உதவியோடு ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே சீனிவாசன் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கதவை வேகமாகத் திறந்து உள்ளே சென்று சீனிவாசனை எழுப்பி அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வேலை நேரத்தில் மது குடித்துவிட்டு வந்து உறங்கி பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியவரை நிரந்தரமாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே இதே நபர் புதுக்கோட்டையில் பணியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அறந்தாங்கிக்குப் பணி மாறுதலாகி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தலைமை மருத்துவர் ரவியிடம் கேட்டபோது ரத்தப்பரிசோதனை நிலைய பணியாளர் மது குடித்துவிட்டுத் தூங்குவதாக வந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தினோம்.
அதில் அவர் மதுகுடித்துவிட்டு வேலை நேரத்தில் உறங்கியதோடு மற்ற பணியாளர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து பொதுமக்களைச் சிரமப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. உடனே அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். மேலும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குநருக்குத் தகவல் அனுப்பியுள்ளோம் என்றார்.

நன்றி: விகடன்
Source: https://www.vikatan.com/news/tamilnadu/aranthangi-gh-employee-suspend-regarding-drunken-issue
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments