புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை வாங்கும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
 வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத வேளாண் பெருமக்களின் நலன்கருதி, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்து வருகிறது. நடப்பாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் 3 எண்கள் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைப்பதால் விவசாய பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு, நல்ல மகசூல் பெற முடியும். 

இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம். இவ்வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு இம்மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மைப் பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களிலிருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். 

இவ்வாறான மையங்களை அமைத்திட விரும்புவோர் முதலில் அதற்குரிய
விண்ணப்பத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அளித்திட வேண்டும். அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மூதுரிமை பதிவேட்டில் பதியப்படும். உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களுக்கு உரிய நிதி அளிக்கப்பட்டவுடன் அவ்வலுவலகம் மூலமாக மூதுரிமை அடிப்படையில் அம்மையங்களை நடத்த விண்ணப்பித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 

விவசாயிகள் குழுக்கள் தமக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்தத் தொகையினை சம்பந்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய வரைவோலையின் நகலினை உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அளித்தவுடன், மாவட்ட செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அவர்களால் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவருக்கு உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு அம்மையத்துக்கு முகவரால் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் வழங்கப்படும். 

மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5.00 இலட்சமும், ஆதி திராவிட பிரிவினருக்கு ரூ.3.00 இலட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில்  வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அவர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும். 

நடப்பு நிதி ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 3 எண்கள் வாடகை மையங்கள் அமைத்திட ரூ.30.00 இலட்சம் மானிய தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை புதுக்கோட்டை மாவட்டம் அவர்களை 94432 64168 என்ற கைபேசி எண்ணிற்கும், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை புதுக்கோட்டைக்கு 9500588125 என்ற கைபேசி எண்ணிலும், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அறந்தாங்கிக்கு 9080343110 என்ற கைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments