புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்



புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் மூலமாக வரும் புகார்கள் அடிப்படையிலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனுக்குடன் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ள பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும் வேண்டும். திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டு இருந்தாலும் அவற்றின் அருகில் பொதுமக்கள் தாங்களோ, தங்கள் குழந்தைகளோ செல்லாதவாறு பாதுகாத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தற்போது பருவமழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, பொதுமக்கள் தாங்களோ, தங்களது குழந்தைகளோ யாரும் நீர்நிலைகளின் அருகில் செல்வதையோ, குளிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments