நீர்நிலைகள் அருகே ‘செல்பி’ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்நீர்நிலைகள் அருகே ‘செல்பி‘ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அவசர கால மேலாண்மை குறித்த காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மாவட்ட அளவில் அவசரகால மேலாண்மைக் குழு மாவட்ட கலெக்டரை தலைவராகவும், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட 24 அலுவலர்களை கொண்டு அமைய பெற்று உள்ளது.

எச்சரிக்கை பலகைகள்

தற்போது பரவலான மழை பெய்து வரும் சூழ்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மின்சாரத்துறையின் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு அதிகளவில் மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நீர்நிலைகள் அருகே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆபத்தான நீர்நிலை கரைகளில் இக்குளம் ஆழமாக இருப்பதால் இங்கு சிறுவர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் எவரும் குளத்தில் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்ற எச்சரிக்கை பலகைகள் உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைத்து வசதிகளுடன் பராமரிக்க

மருத்துவத்துறையின் மூலம் நோய்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், மருத்துவமனைகளை தொடர்ந்து தேவையான அனைத்து வசதிகளுடன் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களும், பிறத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தொடர்பு கொள்ளும் வகையில் செல்போன் எண்களை சரிபார்த்து வைத்து கொள்ளவும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள பேரிடர் மேலாண்மை வாட்ஸ்-அப் எண்ணினை தொடர்ந்து கண்காணித்து அதில் குறிப்பிடப்படும் தகவல்களை உடனுக்குடன் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments