கேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு



கேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்தது.
திருமணம் முடிந்ததும் மணப்பெண் பிரதியூஷா மணமகனுடன் மசூதிக்கு சென்று அதன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த செம்மாங்குழியைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார்.

இவரது வீடு செம்மாங்குழியில் உள்ள இடிவேட்டி ஜூம்மா மசூதி எதிரே உள்ளது. வீட்டிற்கும், மசூதிக்கும் இடையே 4 மீட்டர் இடைவெளியே உள்ளது.

மசூதியில் வழிபாடு மற்றும் தொழுகைகள் நடக்கும்போது, நாராயணன் நம்பியாரின் வீட்டில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இதற்காக நாராயணன் நம்பியார் எதுவும் சொல்வதில்லை. மாறாக தொழுகைக்கு வருவோருடன் நட்பில் இருந்து வந்தார்.

நாராயணன் நம்பியாரின் மகள் பிரதியூஷா, (வயது 22). இவருக்கும், பாலாரியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நவம்பர் 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்து வந்தனர். பிரதியூஷா வீட்டில் திருமண வேலைகள் நடந்தபோது, வீட்டின் எதிரே இருந்த மசூதியும் களை கட்டி காணப்பட்டது. அங்கும் விழா ஏற்பாடுகள் நடந்தது.

மசூதியில் நடந்த விழா ஏற்பாடுகள் பற்றி விசாரித்த பின்னர்தான் பிரதியூஷாவின் திருமணம் நடக்க இருந்த 10-ந்தேதி மிலாடி நபி கொண்டாட்டம் நடக்க இருப்பது நாராயணன் நம்பியார் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.

மசூதியில் கொண்டாட்டம் நடக்கும்போது எதிரே இருக்கும் தனது வீட்டில் திருமண விழாவை எப்படி நடத்துவது? என்று நாராயணன் நம்பியார் மனம் கலங்கினார். இதுபற்றி மகள் பிரதியூஷாவிடம் கூறினார்.

பிரதியூஷாவுக்கு மசூதி நிர்வாகிகள் அனைவரையும் நன்கு தெரியும். இதனால் அவர், மசூதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது மிலாடி நபி விழா நாளில் தனது திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமணம் முடிந்த பின்பு மிலாடி நபி விழாவை கொண்டாட முடியுமா? என்றும் கேட்டார்.

மசூதி நிர்வாகிகள் இது பற்றி கூடி ஆலோசித்தனர். பின்னர் அவர்கள் பிரதியூஷா திருமணத்திற்காக இடிவேட்டி ஜூம்மா மசூதியில் நடக்க இருந்த மிலாடி நபி கொண்டாட்டத்தை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர். இதனை பிரதியூஷாவுக்கும் தெரிவித்து திருமண விழாவை சிறப்பாக நடத்தும்படி வாழ்த்தினர்.

இந்து தம்பதியின் திருமணத்திற்காக மிலாடி நபி விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இடிவேட்டி ஜூம்மா மசூதி நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.

இதுபற்றி மசூதி செயலாளர் அப்துர் ரகுமான் கூறும்போது, திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வு. மிலாடி நபி கொண்டாட்டம் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று மசூதி நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவேதான் திருமணத்திற்காக மிலாடி நபி விழாவை ஒருவாரம் தள்ளி வைத்தோம் என்றார்.

திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் பிரதியூஷா கணவர் வீட்டிற்கு புறப்படும் முன்பு மசூதி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments