திருச்சி-துபாய் விமானம் பழுதால் விடிய, விடிய தவித்த பயணிகள்



திருச்சி விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விடிய விடிய தவித்தனர்.

திருச்சி -துபாய் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் இரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பின்னர் 1 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.

வழக்கம்போல் நேற்றிரவு 12.05 மணிக்கு அந்த விமானம் வந்தது. மீண்டும் புறப்பட இருந்த அந்த விமானத்தில் 165 பயணிகள் செல்ல இருந்தனர். அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானத்தில் ஏறுவதற்கு பயணிகள் அனைவரும் காத்திருந்தனர்.

இந்தநிலையில் விமானத்தில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக வழக்கமான பணியாக விமானிகள் விமானத்தை இயக்கி பார்த்தனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோளாறை சரி செய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை.

இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை வரும் மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானம் இன்று காலை 8.55 மணிக்கு 165 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது. இருப்பினும் சரியான நேரத்தில் துபாய் செல்ல முடியாததாலும், இரவு முழுவதும் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் பயணிகள் சற்று சிரமத்திற்குள்ளாகினர்.

பழுதான விமானம் திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments