நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்டியலில் யார் முதலிடம்?



சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேற்படிப்பு, வேலை, பொருளாதார தேவைகள், குடும்ப வறுமை, அயல்நாட்டு மோகம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் செல்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதனாலேயே உலகில் இந்தியர்கள் இல்லாத நாடுகள் பட்டியல் மிகக்குறைவு என்றே சொல்லலாம்...

அமெரிக்கா, லண்டன், துபாய்,  சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு சென்று வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே உலக மக்கள் பலரும் அந்நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர். அப்படி சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சென்று வசிப்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் குடியேறுபவர்கள் குறித்து ஆய்வு செய்த இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை- 2020ஐ வெளியிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக 1 கோடியே 75 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது. மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள் அதிகளவு வெளிநாடுகளில் வசிப்பதால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

 அதற்கு அடுத்தபடியாக 1 கோடியே 18 லட்சம் பேருடன் மெக்சிகோ 2ம் இடத்திலும்,   1 கோடியே 7 லட்சம் பேருடன் சீனர்கள் 3ம் இடத்திலும் உள்ளனர்.

உலக மொத்த மக்கள் தொகையில் 3.5 சதவீதம் அதாவது சமார் 27 கோடிபேர் பல்வேறு காரணங்களுக்காக சொந்த நாட்டைவிட்டு பிறவெளிநாடுகளில்  வசித்து வருகின்றனர். ஐ.நா. கூற்றுப்படி, சர்வதேச குடியேறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது சுமார் 14.1 கோடி மக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குடிபெயர்வதையே விரும்புவதும் இந்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நாடுகளுக்கு செல்பவர்களில் 3ல் 2பேர் பணி நிமிர்த்தமாகவே செல்வதாகவும் இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவது சுமார்  69ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து பணம் பெறும் நாடுகளின் பட்டியிலிலும் இந்தியாவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 5லட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் சீனாவும் மெக்சிகோவும் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கின்றன.

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களே அதிகளவு பணத்தை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்புகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் அதிகளவு பணத்தை தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்புகின்றனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments