அரிச்சல் முனை செல்லத் தடை நீங்கியது!’- தனுஷ்கோடிக்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்கடல் கொந்தளிப்பினால் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 20 நாள்களுக்குப் பின் நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் நேற்று தனுஷ்கோடி சென்றனர்.

துறைமுக நகரமாக விளங்கிவந்த தனுஷ்கோடி கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. இந்தக் கோரப் புயல் தாக்குதலில் தனுஷ்கோடிக்குச் சென்ற ரயில் பாதை மற்றும் சாலைகள் உருக்குலைந்து போயின. இந்தப் புயலின் நினைவுகளாக தனுஷ்கோடி பகுதியில் காட்சியளிக்கும் கட்டடங்களையும் இருபுறமும் உள்ள கடல் நீர் ஒன்றிணையும் பகுதியைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் சென்றுவருகின்றனர்.இரு பக்க கடலும் ஒன்றிணையும் பகுதியைக் காண ஏதுவாக இரு ஆண்டுகளுக்கு முன் அரிச்சல்முனை பகுதிக்குச் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க சாலையின் இரு புறங்களிலும் கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சொந்த வாகனங்களில் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் சிரமம் இன்றி தனுஷ்கோடி அரிச்சமுனை பகுதி வரை சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் சாலையின் பாதுகாப்புக்குப் போடப்பட்ட ஒரு பகுதி கற்கள் கூட கடலுக்குள் சென்றது. இதனால் அரிச்சல்முனைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடல் அலையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்று இரு பக்க கடலும் ஒன்றிணையும் அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வேதனையுடன் திரும்பினர். இந்த நிலையில், கடல் அலையின் வேகம் கடந்த இரு நாள்களாக குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இது குறித்த தகவல் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாக தெரியாததால் மிக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைக் காண வந்துசென்றனர்.

நன்றி : விகடன்


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments