டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையம்...டிச.,27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடித்து, அடுத்த 4 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்கனவே வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பாணையை வாபஸ் பெறுவதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டது.


சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டார். தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புக்கள் தவிர்த்து, ஊரக அமைப்புக்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் நடத்தை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்கு தடை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அட்டவணையை மட்டும் வெளியிட்டார்.

தேர்தல் அட்டவணை விபரம்:

வேட்புமனு தாக்கல்: 09.12.2019

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : 16.12.2019

மனுக்கள் பரிசீலனை: 17.12.2019

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: 19.12.2019

முதல் கட்ட ஓட்டுப்பதிவு: 27.12.2019

2 ம் கட்ட ஓட்டுப்பதிவு: 30.12.2019

ஓட்டு எண்ணிக்கை: 02.01.2020

தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள்: 04.01.2020

கவுன்சிலர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு: 06.01.2020

தலைவர்களுக்கான மறைமுக தேர்தல்: 11.01.2020

தொடர்ந்து தேர்தல் கமிஷனர் பழனிசாமி கூறுகையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் எனவும், 2 ம் கட்ட தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் எனவும் தெரிவித்தார்.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் :

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments