குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்



குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் நிறைவேற்றினார்.

கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக இந்த தீர்மானத்தை முன்மொழிந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரவையில் பேசியதாவது,

அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதுபோன்ற இயக்கங்களை மையமாக வைத்து மதச்சார்ப்பற்ற கண்ணோட்டங்களுடன் நவீன ஜனநாயகத்தை உருவாக்கும் விதமாக நாட்டின் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. 

நமது நாடு பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பு பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கருத்தை நிலைநிறுத்தியதற்கு இது ஒரு காரணம்.

நாட்டைப் பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. கேரளத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் அரேபியர்கள் என அனைவரும் வசித்துள்ளனர். ஆகையால் கேரள மாநிலம் மதச்சார்ப்பின்மையை கொண்டிருப்பதற்கான நீண்ட வரலாறு கொண்டது. 

இங்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். கேரள பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பு இப்பேரவைக்கு உண்டு. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் அனைவரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது. எனவே இதற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments