ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் புகையான் நோய் தாக்குதலுக்கு சம்பா, தாளடி நெற்பயிர் நாசம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. குறிப்பாக ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் ஆங்காங்கு தென்படுகிறது.
புகையானை கட்டுபடுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. இது சாம்பல் நிறத்தில் இருக்கும் கண்ணாடி போன்ற மெல்லிய சிறிய இறக்கைகளை கொண்டிருக்கும். இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. இதன் தாக்குதலால் பயிர் திட்டுத்திட்டாக வட்ட வடிவில் காயத் தொடங்கி நெற்பயிர் எரிந்து புகைந்துவிட்டாற்போல் காணப்படுவதால் இதற்குப் புகையான் எனப் பெயர். மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பு பயிர் காய்ந்துவிடும். மணிகள் முற்றாமல் பதராகிவிடும். பயிரின் மேற்பாகத்தில் இதன் அறிகுறி தெரியாது. 

பயிரின் அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ. உயரம் வரை இவற்றைக் காணலாம். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களில் இதன் தாக்குதல் அதிகமிருக்கும். வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக இருக்கும்போது புகையான் பல்கிப் பெருகும். தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை இப்பூச்சியின் எண்ணிக்கை பெருகச் சாதகமாக உள்ளது.

மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமிட்ட வயல்களிலும், வரப்போரங்களில் மரநிழல் இருந்தாலும் புகையான் பெருகிட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வயலையும் வரப்பையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தழைச்சத்து உரத்தை 3 அல்லது 4 முறையாகப் பிரித்து இடவேண்டும். நெற்பயிரினை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து திருந்திய நெல் சாகுபடி முறையில் நட வேண்டும் அல்லது எட்டடிக்கு ஓர் அடி இடைவெளி பட்டம் விட்டு நடவு செய்தல் வேண்டும். வயலில் நீர் மறைய நீர் கட்டுவதனால் புகையானின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். 

வயலில் தண்ணீர் தொடர்ந்து தேங்குவதை தவிர்க்க வேண்டும். பகலில் வயலில் ஆங்காங்கு மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைத்தும் இரவில் விளக்கு பொறிகளை வைத்தும் தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும், புகையானின் தாக்குதல் பொருளாதார சேதநிலையை தாண்டும்போது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி 300 மி.லி. அல்லது தையோமெத்தோசம் 25 டபிள்யூ.ஜி - 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல் - 40 மி.லி. இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தூர்களின் அடிப்பகுதி நன்கு நனையுமாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 

பூச்சிமருந்து தெளிக்கும்முன் வயலில் உள்ள தண்ணீரை முழுவதும் வடித்துவிடவேண்டும். இவ்வாறு, நெல் சாகுபடியில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர்விளைச்சல் பெற்றிடுமாறும் மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments