புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி!தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளை விட சிறந்து விளங்குகின்றன. இருப்பினும் ஒருசில அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகின்றன. இந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம், லெக்கணாப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியும் இணைந்து உள்ளது.
கீரனூரில் இருந்து இலுப்பூர் செல்லும் சாலையில் உள்ள லெக்கணாப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 2011-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 230 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன் சாதாரண அரசு பள்ளியாக தான் இருந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆண்டனி என்பவர் பொறுப்பேற்று கொண்ட பிறகு இப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சி அடைந்து உள்ளது.

பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு

குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு உள்ளது. ஆனால் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் முதலில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்து விட்டு, பள்ளி வளாகத்தில் அமர்ந்து அவர்களுக்கு என வழங்கப்பட்டு உள்ள கையெழுத்து நோட்டில் கையொப்பம் இட்டு விட்டு பின்னர்தான் பள்ளி வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.

புகார் பெட்டி

மேலும் பள்ளியின் அருகே கடைகள் எதுவும் இல்லாததால் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் விலை கொடுத்து வாங்கி, அதை ‘ஹானஸ்டிரி ஸ்டோர்’ என அறிமுகம் செய்யப்பட்ட அறையில் வைத்துள்ளனர். 

மேலும் அங்கு, அதில் ஒரு உண்டியலை வைத்து உள்ளனர். இதில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு, அதற்கான பணத்தை அங்குள்ள உண்டியலில் போட்டுவிட்டு செல்ல வேண்டும். இதை கண்காணிக்க தனியாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்கள் ஏமாற்றாமல், சரியாக பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்கள் எடுத்து செல்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யும் வகையில், புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் எண்ணற்ற மூலிகை செடிகளை கொண்டு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல பள்ளியில் உள்ள வகுப்பறைகள், படிக்கட்டுகள், தலைமை ஆசிரியர்கள் அறைக்கு முன்பு உள்பட பல்வேறு இடங்களில் அதிக அளவில் செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

உலக உருண்டை

பள்ளி வளாகத்தில் மாணவர்களை கவரும் வகையில் செயற்கை நீர் ஊற்று, மாணவ, மாணவிகள் உலகில் உள்ள நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் உலக உருண்டை போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் சுத்தமான ஆடை அணிந்து வந்தால், அவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ‘ஜென்டில் மென்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல ஒழுக்கம், அமைதி, நன்னடத்தை, தலைமை பண்பு போன்றவற்றை வளர்க்கும் வகையில் இவற்றில் சிறந்து விளங்கும் வகுப்பறைக்கு வாரத்திற்கு ஒரு முறை ‘ஸ்டார் ஆப் தி வீ்க்’ என்ற விருது வழங்கப்படுகிறது.


வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்யும் வகையில் பள்ளி வளாகத்தில் ‘தருவோம் பெறுவோம்‘ என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு, அதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை இந்த இடத்தில் மாணவ, மாணவிகள் வந்து வைத்துவிட்டு செல்வார்கள். அந்த பொருட்கள் யாருக்காவது தேவைப்பட்டால், ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு, அந்த பொருளை மாணவ, மாணவிகள் எடுத்து கொள்ளலாம்.

போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி

‘நீட்’ தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, போட்டித்தேர்வுகளை போன்று, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது அறிவினை வளர்க்கும் வகையில் வாரத்தில், 2 பாடவேளை ஒதுக்கீடு செய்து, மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு தொடர்பான தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவ, மாணவிகளிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள், கட்டுரைகள் போன்றவை ஆங்காங்கே மாணவ, மாணவிகளின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் கல்லூரிகளில் உள்ளதுபோல பள்ளியிலேயே மாணவ, மாணவிகளுக்கு என தனி நூலகம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதேபோல ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறிய நூலகமும் உள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு ஆய்வுக்கட்டுரை

இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவ-மாணவிகளைப் போல ஆய்வுக்கட்டுரைகள் எழுத வேண்டும். இவ்வாறு எழுதப்படும் அனைத்து ஆய்வுக்கட்டுரையும் பள்ளி நூலகத்தில் வைத்து முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் ‘குழந்தை பருவத்தில் நான்’ என்ற தலைப்பில் அவர்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதி, அதை வெளியிட வேண்டும் என்ற முறையும் உள்ளது.


300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்

பள்ளியின் வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் ஆண்டனி கூறுகையில், நான் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தபிறகு பள்ளியை பசுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து, ஆசிரியர்கள் உதவியுடன் சிறிய பூங்கா மற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வரப்படுகிறது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் எழுச்சிமிக்க வாசகங்கள், மாணவ, மாணவிகளின் ஓவியங்கள் போன்றவற்றை காட்சிக்கு வைத்து உள்ளோம்.


எங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. பள்ளியை சுற்றி உள்ள பகுதி காட்டுப்பகுதி போல் இருப்பதால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மிகவும் கட்டாயமான ஒன்று. தற்போது தற்காலிகமாக இரும்பு முட்கம்பிகளை கொண்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு சரியாக சாலை வசதியும் இல்லை’ என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments