மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான எந்தவித விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மத்தியில் நடத்தாததால் தேர்தல் நாளன்று வாக்குபதிவு சதவீதம் அதிக அளவு குறைய வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக வரும் 27ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

இதே போல் இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம்தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும்,225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகள் செலுத்த வேண்டும். இதற்காக நான்கு வாக்கு சீட்டுகளை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும். மாதிரி வாக்கு சீட்டுகள் மூலம் எவ்வாறு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எந்தவித விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை. மேலும் சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று பல்வேறு வழிகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பல்வேறு பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மேலும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணம் வாங்காமல் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இதே போல் திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் எந்தவித விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மற்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். ஏனென்றால் குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தான் தீர்வு கிடைக்கும். இதனால் மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். 

இது குறித்து எந்தவித விழிப்புணர்வையும் வாக்காளர்கள் மத்தியில் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் ஆணையம் எதுவும் செய்யவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் எந்த பொது இடத்திலும் இல்லை.இதற்கான ஏற்படுகள் நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை. குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளில் நான்கு வாக்கு சீட்டுகளை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும். இதில் எந்தெந்த பதவிக்கு என்னவிதமான கலரில் வாக்கு சீட்டுகள் வழங்கப்படும், அதில் எப்படி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். தவறாக வாக்களித்தால் செல்லாத ஓட்டாக கணக்கீடப்படும் என்று வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இதற்கு தனியாக ஒரு அலுவலரை நியமித்து தினசரி எந்த விதமான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது அடுத்தகட்ட பணிகள் என்ன என்று மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்களிக்கும் வாக்காளர்களின் சதவிகிதம் உயரும், நல்ல வேட்பாளர்கள் பதவிகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் அதே நேரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் குறித்து தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments