தொண்டி அருகே, தொடர் மழையால் ராட்சத பள்ளம்



தொண்டி அருகே மழையால் சோழியக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சோழியக்குடி கிராமத்தில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையின் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் மட்டும் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

மேலும் இந்த சாலையின் ஓரத்தில் பெரிய அளவில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் கனரக வாகனங்கள் விபத்துகளை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மழைநீரால் சாலை சேதமடைந்து இருப்பதை திருவாடானை தாசில்தார் சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சோழியக்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த மழைநீரால் சாலை அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் உருவாகி வருகிறது. மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் ஆபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments