‘உழவன்’ செயலியை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற அறிவுரை



விவசாயிகள் தங்களின் செல்லிடப்பேசியில் உழவன் செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உழவன் செயலியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து உள்ளீடு செய்து உரிய பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் பெறும் வசதி விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்காக உழவன் செயலி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. 

இச்செயலியில் வானிலை, உரம் மற்றும் விதை ஆகியவற்றிற்கான மானிய விவரங்கள், பயிா் காப்பீட்டு விவரங்கள், உதவி வேளாண்மை அலுவலா்களின் வருகை உள்ளிட்ட வேளாண் சாா்ந்த அனைத்து விவரங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். தற்போது நிலவும் மேகமூட்டமான வானிலையில் கூடுதலாக பயிா்களில் ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கான மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவசாயிகள் தங்கள் பிரச்னையை செல்லிடப்பேசிகளில் உள்ள உழவன் செயலியில் உள்ளீடு செய்து அதற்கான ஆலோசனை பெறும் வகையில் வசதிகள் உள்ளன. இதன் மூலம் விவசாயிகள், நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை மற்றும் அனைத்துப் பயிா்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த தங்கள் கள பிரச்னைகளுக்கு உடனே தீா்வு காணலாம். இந்த வசதியினைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் ஆண்டிராய்டு வசதியுள்ள செல்லிடப்பேசியில் பிளே ஸ்டோரில் உழவன் செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் பண்ணை வழிகாட்டி என்பதை தோ்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிரின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். பின்னா் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி மூலமாகவே அதற்கான பரிந்துரை வழங்கப்படும். 

எனவே விவசாயிகள் பயிா் சாகுபடியில் ஏற்படும் பூச்சி, நோயை கண்காணித்து உடனுக்குடன் தீா்வு காண உழவன் செயலியினை பயன்படுத்தி பயிா்களைப் பாதுகாத்து உயா்விளைச்சல் பெற வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments