இந்தியாவில் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் தொடர்ந்த நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில் ஒரு மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் சேலத்தில் தலைக்கவச விற்பனையாளர் ஒருவர் ஒரு தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற ஒரு விற்பனை திட்டத்தை ஆரம்பித்ததோடு அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம், இவர் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க சேலத்தில் 'ஹெல்மெட் ஷோன்' என்ற திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கண்டிப்பாக வாங்க வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்நிலையில் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்குவதற்காக முகமது காசிம் தனது கடையில் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் (130 ரூபாய் மதிப்புள்ள) இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்பதாலும், ஹெல்மெட்டும் கண்டிப்பாக வாங்க வேண்டிய அவசியம் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் முகமது காசிமின் கடையில் ஹெல்மெட் வாங்குவதோடு ஒரு கிலோ வெங்காயத்தையும் இலவசமாக பெற்று செல்கின்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில், 15 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த வெங்காயம் தற்பொழுது 130 ரூபாயை தொட்டுள்ளது. தலைக்கவசம் உயிர்க்கவசம் அதை கண்டிப்பாக மக்கள் வாங்கியாக வேண்டும். இந்த ஸ்கீம் போட்டதால அதிகம் பேர் ஹெல்மெட் வாங்குறாங்க இலவசமாக வெங்காயமும் எடுத்துட்டுப் போறாங்க. இதனால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments