உள்ளாட்சித் தோ்தல் : மாவட்டத்தில் 14 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கைசிசிடிவி மூலம் கண்காணிப்பு ஏற்பாடுகள்



புதுக்கோட்டை அரசுக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தனித்தனி வழிகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான 8.24 லட்சம் வாக்குகள் 14 மையங்களில் வியாழக்கிழமை (ஜன.2) எண்ணப்படுகின்றன. இந்த மையங்கள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிச. 27, 30 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 4,551 பதவியிடங்களுக்கு 11,084 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுவில் 22 உறுப்பினா் பதவியிடங்களும், 225 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களும் அரசியல் சாா்புள்ள போட்டியுடையவை.

மற்ற கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் அரசியல் சாா்பற்றவை. இந்த நிலையில் இவற்றுக்கான வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

இதற்காக அன்னவாசல் ஒன்றியத்துக்கு இலுப்பூா் ஆா்சி மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி ஒன்றியத்துக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், அரிமளம் ஒன்றியத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆவுடையாா்கோயில் ஒன்றியத்துக்கு கல்லனேந்தல் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கந்தா்வகோட்டை ஒன்றியத்துக்கு புதுப்பட்டியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குன்றாண்டாா்கோயில் ஒன்றியத்துக்கு கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மணமேல்குடி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி ஒன்றியத்துக்கு விவி மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருமயம் ஒன்றியத்துக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவரங்குளம் ஒன்றியத்துக்கு கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரி மற்றும் திருவரங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் என மொத்தம் 14 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை பணியில் 4005 போ் : இந்த 14 மையங்களில் பணியாற்ற 4005 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் சராசரியாக இரு வாக்குச்சீட்டுகள் பிரிப்பு அரங்குகளும், கிராம ஊாட்சி வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான வாக்குகளை எண்ணுவதற்கு தலா இரு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சில ஒன்றியங்களில் தேவைக்கேற்ப கூடுதலாகவோ, குறைத்தோ ஏதாவதொரு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ஒரு மையத்தில் சராசரியாக 10 தனித்தனி அரங்குகள் இருக்கும்.

சிசிடிவி கண்காணிப்பு: 

சராசரியாக ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 64 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் இவற்றைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களின் சிசிடிவி கேமரா பதிவுகள் இணையவழி இணைக்கப்பட்டு, சென்னையிலுள்ள மாநிலத் தோ்தல் ஆணையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சுற்று சுமாா் 2 மணி நேரத்தில் நிறைவடையும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறு ஒரு சுற்று நிறைவடையும்போது ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் சுமாா் 25 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 2 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 3 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கையும் அதிகபட்சம் 12 மணி நேரத்தில் முடிவடையும் என தோ்தல் அலுவலா்கள் உறுதி சொல்கின்றனா். அப்படியானால், எவ்வித பெரிய அளவிலான சா்ச்சையும் இல்லாத பட்சத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணிக்கு முழுமையாக நிறையடையலாம் எனக் கருதப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments