கோபாலப்பட்டிணத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்..! உதவும் கரங்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு.!



கோபாலப்பட்டிணத்தில் அதிகளவில் தெரு நாய்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஊராட்சி மன்ற தலைவியிடம் உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் குழுமம் சார்பில் மனு அளித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது. இந்த தெரு நாய்கள் ஒரு சில நேரங்களில் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விடுகிறது.

இந்நிலையில், கோபாலப்பட்டிணம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் குழுமம் சார்பாக இன்று 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவியிடம் அன்வர் இப்ராஹிம் மற்றும் குழும உறுப்பினர்கள் நேரில் சென்று மனு அளித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குபா 1-வது தெருவைச் சேர்ந்த அம்ஜத் கான் அவர்களின் மகன் ஜமீல் என்ற சிறுவனை நாய் கடித்தது. மேலும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனையும் கடித்து குதறியது. ஆக இரண்டு சிறுவர்கள் தெருநாய் கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டிணம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் தொல்லையை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தகவல்: அன்வர் இப்ராஹீம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments