காஸ் சிலிண்டர் டெலிவரிமேன்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீங்க; அப்படி டிப்ஸ் கேட்டால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.!



வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன்கள் சிலிண்டர் விலைக்கு மேல் கூடுதலாக 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓரிரு மாடிகள் வரை ஏறிச்சென்று சிலிண்டர் விநியோகம் செய்யும்போது இதைக்காட்டிலும் கூடுதல் தொகையை டிப்ஸ் என்ற பெயரில் கட்டாய வசூல் செய்கின்றனர்.


இந்நிலையில், காஸ் சிலிண்டர் டெலிவரிமேன்களுக்கு டிப்ஸ் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று இண்டேன் என்ற பெயரில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இண்டேன் காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரில் கொண்டு வந்து வழங்குகின்றனர். டெலிவரி மேன் வழங்கும் ரசீதில் குறிப்பிட்டுள்ள சில்லரை விற்பனை விலையில், வீட்டுக்கு ஒப்படைப்பு கட்டணமும் அடங்கி உள்ளது.

காஸ் சிலிண்டரின் விலையை மட்டும் செலுத்த, வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். முன்பதிவு செய்தவுடன், வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தும், லிங்க் அனுப்பப்படும். இது, ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்த முடியும். இதை கிளிக் செய்து, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ வாலட் உள்ளிட்ட வழிமுறைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம். 

காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போதுகூட, பணியாளரிடம் உள்ள கருவி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு டிப்ஸ் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. எல்பிஜி குறித்த அவசர சேவைக்கு 1906 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். புகாருக்கு, 18002233555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments