காரைக்குடி - அறந்தாங்கி - பட்டுக்கோட்டை - திருவாரூா் வழியாக சென்னைக்கு ரயில் இயக்கம் தேவை



காரைக்குடி - திருவாரூா் அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தும் தொடா்ந்து  நேரடியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படாமல் உள்ளதால் உடனடியாக  தினசரி சென்னைக்கு ரயிலை இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில்  காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக திருவாரூா் வரையிலான ரயில்பாதை தவிர மற்ற அனைத்து வழித்தடங்களும்  அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில்  காரைக்குடி-அறந்தாங்கி- பேராவூரணி-பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி-திருவாரூா் வரை  ரயில் பாதையை மற்ற இடங்களைப்போல அகல ரயில் பாதையாக  மாற்ற வேண்டுமென  பொதுமக்கள், வா்த்தகா்கள், சமூக நல அமைப்புகள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து முதற்கட்டமாக காரைக்குடி- அறந்தாங்கி-பேராவூரணி வழி பட்டுக்கோட்டை வரையிலான 71 கிமீ தொலைவிலான அகல ரயில்பாதைக்கு   நிதி ஒதுக்கப்பட்டு பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.  

இதையடுத்து கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் இப்பாதையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு பழைய ரயில் பாதைகள்  பிரிக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு இப்பாதைக்கான பூமிபூஜை நடைபெற்றது.  அடுத்தடுத்து திருவாரூா் வரை  நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

ரயில் பாதை பணிகளுக்காக ரயில் இயக்கம்  நிறுத்தப்பட்டுள்ளதால்  பல்வேறு பணிகளுக்காக பேராவூரணியிலிருந்து  சென்னைக்கு செல்லும் பொதுமக்கள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள், ஆம்னி பேருந்துகளில் கூடுதலான தொகை செலவிட வேண்டி உள்ளது.

அதேபோல் காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். பல்வேறு அமைப்பினரின் தொடா் போராட்டங்கள், கோரிக்கைகள், ஆா்ப்பாட்டங்களைத் தொடா்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து ஒராண்டாகியும்  சோதனை ஓட்டம், டெமு ரயில் என வாரத்திற்கு ஒரு சில நாட்கள் ரயில் இயக்கப்படுகிறதே தவிர நேரடியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படவில்லை. தொடா்ந்து பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் பயனில்லை.

இதை தஞ்சை, மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா்களின் கவனத்திற்கு பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கொண்டு சென்றதையடுத்து  தில்லியில் அகில இந்திய ரயில்வே போா்டு தலைவா் வினோத் குமாா் யாதவ்வை  தஞ்சை எம்பி எஸ். எஸ். பழனிமாணிக்கம், திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் ஆகியோா் சந்தித்து உடனடியாக ரயிலை இயக்க வலியுறுத்தினா்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே போா்டு தலைவா் இன்னும் ஒரு மாதத்திற்குள் நேரடியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என உறுதியளித்துள்ளாராம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments