பாதுகாப்பு ஒத்திகை எனும் பெயரில் இஸ்லாமியர்களை களங்கப்படுத்தும் தமிழக காவல்துறை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் .



பாதுகாப்பு  ஒத்திகை எனும் பெயரில் இஸ்லாமியர்களை களங்கப்படுத்தும் தமிழக  காவல்துறை - 
 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  கடும் கண்டனம் .

இஸ்லாமிய  மார்க்கத்தையும்  முஸ்லிம்  சமுதாயத்தையும்  தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற  போக்கானது  ஒவ்வொரு  காலகட்டங்களிலும்  ஆதிக்க வர்க்கத்தினரால் கையாளப்பட்டு வருகின்றது.

திரைப்படங்கள் முதல் பொது ஊடகங்கள் வரை, இத்தகைய சித்தரிப்புகள் இஸ்லாமிய சமூகத்தை எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

இஸ்லாம் என்றைக்கும் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை, அது அன்பையும் மனித நேயத்தையும் தான் போதிக்கிறது என்பதை இஸ்லாமிய சமுதாயம் பிரச்சாரங்கள் வாயிலாகவும் தங்கள் வாழ்வியல் பிரதிபலிப்பின் வாயிலாகவும் என்ன தான் அழுத்தமாக சமூகத்திற்கு புரிய வைத்தாலும் கூட, அதிகாரம் பெற்றோரின் பொய்களும் அவதூறுகளுமே வேகமாக பொது மக்களை சென்றடைகிறது.

சமீபத்தில், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பயங்கரவாதிகள் என பகிரங்கமாக விமர்சித்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூகம் முன் வைத்த கோரிக்கை தமிழக அரசாங்கத்தால் கடுகளவும் பொருட்படுத்தப்படாத நிலையில், தற்போது மென்மேலும் இந்த சமுதாயத்தை இழிவு செய்யும் வேலைகளிலேயே தமிழக அரசு தொடர்ந்து இறங்கியுள்ளது.

தீவிரவாத தடுப்பு ஒத்திகை என்கிற பெயரில், தமிழக காவல்துறை சார்பில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி (Mock drill) நடத்தப்பட்டது.

எதிர்பாராத பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தேறி விட்டால் பொது மக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்வது, எவ்வாறு தப்பிப்பது, காவல்துறை எப்படி அந்த சூழ்நிலையை கையாள வேண்டும் என்பன போன்ற பயிற்சிகள் செய்முறை வடிவில் ஒத்திகையாக பயிற்றுவிக்கப்பட்டது.

அந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் போன்று வேடமிடப்பட்டவர்கள்  முகங்களில் இஸ்லாமியர்களின் அடையாளமான தாடி ஒட்டப்பட்ட நிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பயங்கரவாத செயல்களுக்கு எவ்வித மத அடையாளமுமில்லை. 
மதம் கடந்து, சாதி கடந்து, மொழி, இன, தேசம் கடந்து அனைத்து வகை மக்களிலும் ஒரு சாரார் இவ்வாறான செயல்களில் ஈடுபடத் தான் செய்கின்றனர் எனும் போது இஸ்லாமியர்களை மட்டும் இவ்வாறு சித்தரிப்பது ஏன் என ஊடகங்களையும் அதிகாரம் பெற்றோரையும் நாம் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறோம்.

முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்துகின்ற இது போன்ற அவதூறு பிரச்சாரங்களினால் தொடர்ந்து இந்த சமுதாயம் பலவகையான இன்னல்களுக்கு உள்ளாகி வருவதையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

இச்சூழலில், இந்த நிகழ்வானது மேலும் இஸ்லாமிய சமுதாயத்தை காயப்படுத்தியிருக்கிறது.

தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியின் போது இவ்வாறு இஸ்லாமிய மத அடையாளங்கள் காட்டப்படுமேயானால், பொது வெளியில் தாடி வைத்திருக்கும் முஸ்லிம்கள் மீது வெகுஜன மக்கள் கொள்ளும் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும்?
என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொது சமூகத்தில் இஸ்லாமிய மார்க்கம் தவறான பிம்பத்திற்கு உள்ளாக வேண்டும் என்று தான் தமிழக அரசு விரும்புகிறதா? என என்ன தோன்றுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் இழிவு செய்யும் வகையிலான தமிழக காவல்துறையின் இத்தகைய வக்கிர செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments