தேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் !மத்திய மோடி – ஷா கும்பலின் பாசிச ஆட்சி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து அப்பாவி மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சித்து வருகிறது.


 தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமையை மறுப்பதாகவும் அமைந்திருக்கிறது, இந்திய அளவில் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், பாதிக்கப்பட்டு அகதிகளாக வருகின்ற மக்களுக்கு எதிரான, மானுட விரோதமாகவும் அமைந்திருக்கிறது.

எனவே இதை நாம் திரும்பப் பெறவேண்டும் என கூறுகிறோம். பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றங்களும், பாஜக ஆதரவு கூட்டணிக் கட்சிகளும் கூட தற்பொழுது இந்த குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராக முன்வந்துள்ளன. இந்தியா முழுவதும் இச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது, இந்த சூழலில் தமிழகத்தில் இந்தச் திருத்த சட்டத்தை எதிர்த்து உறுதியான மக்கள் திரள் நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும். மாநிலத்தை ஆளுகின்ற அடிமை எடப்பாடி பழனிச்சாமி அரசு திருத்த சட்டத்தை  ஆதரவாக வாக்களித்த தோடு, இன்றுவரை மக்கள் போராட்டங்களுக்குப் பிறகும் அதற்கான கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து செய்வோம் என அறிவித்துள்ளது.

இச்சட்டத்தின் அடிப்படையில் ஒருவருக்கு குடியுரிமையை பறிப்பதற்கு முன்பு, அவரை சந்தேகத்திற்குரிய வராக மாற்றுவதற்கான வேலையை, தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பின் வழியாக மறைமுகமாக செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.  முதலில் தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பை நடத்தி பிறகு தேசிய குடியுரிமை பதிவின்(NRC) வாயிலாக ஒருவரை சந்தேகத்துக்குரிய வராக மாற்றி பிறகு புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின்(CAA) வாயிலாக அவரை குடியுரிமை பறித்து மனிதத்தன்மையற்ற முகாம்களில் அடைப்பதற்கான பாசிச திட்டத்தை பாசிச பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.

எனவே முதலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பை மறுத்து ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவதன் வாயிலாக காவி கும்பலின் ஒட்டுமொத்த சதித் திட்டத்தையும் முறியடிப்பதற்கான பணியை தொடங்க முடியும் ,எனவே தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கின்ற தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) கணக்கெடுப்புக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! கணக்கெடுப்பிற்கு நமது சொந்த விவரங்களை அளிப்பதற்கு மறுப்போம்.

சாதி கடந்து மதம் கடந்து கட்சி கடந்து தமிழர்களாக ஒன்றுதிரண்டு அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை எடுத்துச் சென்று புரியவைத்து மக்கள் இயக்கமாக மாற்றுவோம்! பாசிசக் காவி கும்பலின் தவறான பிரச்சாரத்தை முறியடித்து, விழிப்புணர்வை உருவாக்குவோம். பாசிச அபாயத்தை முறியடிக்க ஜனநாயகத்தைக் காக்க இந்நேரத்தில் அணியமாவோம் என தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம். நன்றி.

-பாலன், பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments