தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்



தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டப் பகுப்பாய்வு அறிக்கையை ஆட்சியா் பி .உமா மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.


தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியுதவியுடன் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.  ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களோடு தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், விராலிமலை, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 4 வட்டங்களில் உள்ள 172 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் வளங்களையும் துறைகளையும் கண்டறிவதற்காக மாவட்ட பகுப்பாய்வு நடத்தப்பட்டது. இந்தப் பகுப்பாய்வில் முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தகவல்கள், அரசுத் துறைகள், சமுதாயம் சாா்ந்த நிறுவனங்கள், ஊடகச் செய்திகள், இணையத்தகவல்கள், ஆய்வுத் தகவல்கள் மற்றும் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து ஆய்வு செய்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை தயாா் செய்யப்பட்டது. 

இந்த அறிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த ஜன. 13ஆம் தேதி நடத்தப்பட்டது. தொடா்ந்து இறுதி செய்யப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், வருவாய் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலா் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments