எதிர்ப்பவர்களை தேசவிரோதி என முத்திரையிடக் கூடாது: உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து



ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் " சேஃப்டி வால்வு" போன்றவர்கள். மாற்றுக்கருத்துள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக தேசவிரோதி என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரையிடுவது அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அரசியலமைப்பு விழுமியங்களைக் காக்கவும், ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், மாற்றுக்கருத்து உடையவர்கள், எதிர்ப்பு மனநிலையில் இருப்பவர்கள் அனைவரையும், தேச விரோதிகள் அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுகிறது. இது ஜனநாயக மதிப்புகளை பாதிக்கும். எதிர்ப்பையும், மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அரசு போலீஸாரைக் கொண்டு அடக்குவது என்பது சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும்.

கருத்துவேறுபாட்டைப் பாதுகாப்பது என்பது நினைவூட்டல் மட்டும்தான். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சமூக ஒத்துழைப்புக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான கருவிகளை சட்டப்படி வழங்க வேண்டும். நம்முடைய பன்முகச் சமுதாயத்தை வரையறை செய்யும் மதிப்புகள், பல்வேறு அம்சங்கள் மீது அரசு ஒருபோதும் ஏகபோக உரிமை கொள்ள முடியாது.

ஜனநாயகத்தில் கருத்து வேற்றுமை, எதிர்ப்பு, கேள்வி எழுப்புதல் போன்றவை சமூகத்தில், அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடிப்படையில் உள்ள இடைவெளிகளை உடைக்கிறது.அதாவது ஜனநாயகத்தின் சேஃப்டி வால்வு போன்று கருத்து வேற்றுமை, எதிர்ப்பு இருந்து வருகிறதுஎதிர்ப்புகளை, கருத்து வேற்றுமைகளை அடக்குவதும், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதும்,தனிப்பட்ட சுதந்திரங்களை மீறுவதும் போன்றவை அரசியலமைப்பு மதிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகிவிடும்.

கருத்து வேற்றுமை மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது, உரையாடல் கொண்ட சமுதாயத்தின் மார்பில் விழுந்த அடிதான். பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுப் பாதுகாத்து உறுதி செய்யவேண்டியது அரசின் அவசியமாகும். அச்சத்தை உருவாக்கும், பேச்சு சுதந்திரத்தை அடக்கும் முயற்சிகளை அரசு நீ்க்க வேண்டும்.

ஜனநாயகத்தின் உண்மையான பரிசோதனை என்பது, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கருத்துக்கு தண்டனை கிடைக்காது என்ற அச்சமின்றி தெரிவிக்கத் தகுந்த இடைவெளியே உருவாக்கி, பாதுகாப்பை அரசு உறுதி செய்வதாகும்.அதேசமயம், கருத்து வேற்றுமைகளுக்குப் பரஸ்பர மரியாதையும், பாதுகாப்பும், அதைத் தெரிவிக்க போதுமான இடைவெளியும் அளிப்பது முக்கியமாகும்.

வேற்றுமைகளை அடக்குவதும், எதிர்த்தரப்பு கருத்துக்கள், குரல்களை ஒடுக்குவதும் பன்முக சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சிந்திக்கும் புத்தியை அடக்குவது என்பது, தேசத்தை அல்லது மனசாட்சியை அடக்குவதாகும்.

இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments