தினசரிகள், பொது அறிவு புத்தகங்கள்!' - சொந்தச் செலவில் புத்தகப் பெட்டகம் அமைத்த புதுக்கோட்டை இளைஞர்



தினசரிகள், பொது அறிவு புத்தகங்கள்!' - சொந்தச் செலவில் புத்தகப் பெட்டகம் அமைத்த புதுக்கோட்டை இளைஞர்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூரைச் சேர்ந்த சுப்பையா, சென்னையில் வேலைபார்த்து வருகிறார். விடுமுறை நேரங்களில் சொந்த கிராமத்திற்கு வரும் சுப்பையா, புத்தகங்கள் படிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இடையாத்தூர் அம்பாள்புரத்தில் தன் சொந்தச் செலவில் நூலகம் அமைக்கத் திட்டமிட்டுள்ள சுப்பையா, முதல்கட்டமாக, தற்போது அம்பாள்புரம் தொடக்கப்பள்ளி அருகே தன் சொந்தச் செலவில் `அறிவொளி அறம்" என்ற புத்தகப் பெட்டகத்தைத் திறந்து வைத்துள்ளார்.


இந்தப் பெட்டகத்தில் தினசரி நாளிதழ்கள், கல்வி, வேலை, பொழுதுபோக்கு சார்ந்த சில மாத இதழ்களும், சட்டம், அறிவியல் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களையும் வைத்துள்ளார். பெட்டகத்தைத் திறந்து செய்தித்தாள் மற்றும் புத்தகத்தை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் அந்தப் பெட்டியில் வைத்துவிடுகின்றனர்.

இந்தப் புத்தகப் பெட்டகம் அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுபற்றி சுப்பையாவிடம் பேசினோம்,``பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதுபற்றிதான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு வர்றேன். இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் பலரும் செய்தித்தாள் கூட படிப்பதில்லை. அந்தக் காலத்தில எங்களுக்கு வாசிக்க அவ்வளவு ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்கலை. மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி மற்ற விஷயங்களையும் தெரிஞ்சிக்கணும்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க பகுதியில் என்னோட சொந்தச் செலவுல நூலகம் அமைக்கலாம்னு முடிவு செஞ்சு எனக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கன்னு சொல்லி முக்கியஸ்தர்கள் சிலரிடம் சொன்னேன். சரியான ஒத்துழைப்பு கிடைக்கலை. அதுக்கப்புறம், நூலகக் கட்டடம் இல்லையென்றால் என்ன, பள்ளியில் வச்சு நூலகத்தை நடத்திக்குவோம்னு பள்ளிக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து பிள்ளைகளிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினேன்.

இப்போ, 700 புத்தகங்கள் வரைக்கும் இருக்கு. பள்ளி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும், முடிஞ்சதுக்கு அப்புறமும் பொதுமக்கள் சிலரும் பள்ளிக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டு புத்தகங்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு போயிட்டு திரும்பக் கொண்டு வந்து கொடுக்கிறாங்க. ஆசிரியர்கள் ரொம்பவே உதவுறாங்க. நூலகம் கட்டுறதுக்கான முன்னெடுப்பாக இப்போ இந்தப் புத்தகப் பெட்டகத்தைத் திறந்திருக்கேன். தினசரி செய்தித்தாள் வந்துவிடுகிறது. பள்ளி மாணவர்கள் ஆர்வமாக வாசிக்கிறாங்க. இப்போதைக்கு அங்க அமர்ந்து படிக்கிற மாதிரியான வசதிகளைச் செய்யலை.

ரெண்டு மாசத்துல, எல்லாரும் அமர்ந்து படிக்கிற மாதிரியான வசதிகளைச் செய்யணும். வாசித்து முடித்துவிட்டு புத்தகத்தைச் சரியா வச்சிடுறாங்க. அதனால பாதுகாப்பு பத்தி இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. விரைவிலேயே சொந்தச் செலவில் நூலகத்தை எழுப்பணும். வரலாறு, கதை, கவிதைகள் அதிகளவில் இல்லாமல் சட்டம், தொழில்நுட்பம், பொது அறிவு எனப் பொதுமக்கள் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய புத்தகங்களைத்தான் தேடித்தேடி வாங்கி வச்சிருக்கேன். சில புத்தகங்களை வருஷக்கணக்குல அலைந்து திரிந்து வாங்கி வச்சிருக்கேன். இந்தப் புத்தகப் பெட்டகத்துக்குப் பொதுமக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. என்னை எல்லாரும் பாராட்டுறாங்க" என்கிறார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments