விபத்தில் காலில் காயம் அடைந்ததால் தம்பியை, பிளஸ்-2 தேர்வு எழுத தூக்கி வந்த அண்ணன்விபத்தில் காலில் காயம் அடைந்ததால் தம்பியை, பிளஸ்-2 தேர்வு எழுத அண்ணன் தூக்கி வந்த சம்பவம் கும்பகோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொது தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வுகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் நேற்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் ஒரு மாணவருக்கு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாத அவரை தேர்வு மையத்துக்கு அவரது அண்ணன் தூக்கி வந்தார்.

கும்பகோணத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ‌ஷாஜகான். இவருடைய மகன்கள் ராசில்முகமது, முகமது பர்வீஸ். இவர்களில் முகமது பர்வீஸ் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று முகமது பர்வீஸ் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியதால் எப்படி பள்ளிக்கு சென்று தேர்வு எழுத போகிறோம் என கலங்கி தவித்த முகமது பர்வீசுக்கு அவரது அண்ணன் ஆதரவாக இருந்தார்.

நடக்க முடியாமல் இருந்த முகமது பர்வீசை அவரது அண்ணன் ராசில் முகமது பள்ளிக்கு தூக்கி வந்தார். பின்னர் அவரை தேர்வு மையத்தில் இருக்கையில் அமர வைத்த ராசில் முகமது தேர்வு முடியும் வரை அங்கேயே காத்திருந்து தேர்வு முடிந்த பின் தனது வீட்டுக்கு தூக்கி சென்றார்.

தேர்வு எழுத முடியாமல் தவித்த தனது தம்பியை தேர்வு மையத்துக்கு தூக்கி வந்த ராசில் முகமதுவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments