கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்!



கேரளாவில் ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காமல் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் தவநூரைச் சேர்ந்தவர் சனோஜ் (38) . திருமணமாகாத இளைஞரான அவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கேரளாவில் மதுக்கடைகள் மூடுவது பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்து இரண்டு நாட்கள் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், கடந்த வெள்ளியன்று காலை அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர், இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டரா பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான சுரேஷ் (38) என்பவரும், சவரா பகுதியைச் சேர்ந்த பிஜு பிரபாகரன் (50) என்பரும், மதுவை திடீரென்று நிறுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளின் காரணமாக சனிக்கிழமையன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இவரகளைப் போலவே கண்ணூர் மாவட்டம் பனயத்தம்பரம்பா பகுதியில் உள்ள கன்னடிவெளிச்சதைச் சேர்ந்த விஜில் (35) என்பவரும் மது கிடைக்காமல் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.

மறுநாள் ஞாயிறன்று திரிச்சூர் மாவட்டம் கொடுங்காளுரைச் சேர்ந்த சுனீஷ் (32) என்பவர் ஆற்றில் மூழ்கியும், நௌபால் (34) என்பவர் ஆப்டர்ஷேவ் லோஷனை விழுங்கியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மது கிடைக்காத காரணத்தால் கேரளாவில் முதல் மரணம் நிகழ்ந்த உடனே மாநில அரசு, மாநில கலால் துறையின் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதை மீட்டெடுப்பு மையங்களும், மனநல பாதிப்படைந்து காணப்படுபவர்களுக்கு ஆலோசனை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது.

தற்போது ஐந்து பேர் வரை மரணமடைந்துள்ள நெருக்கடி நிலையைச் சமாளிக்க மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் மாநில கலால் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments