கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது பற்றி ஜமாஅத் நிர்வாகத்தின் நிலைப்பாடு.?



அன்புள்ளம் கொண்ட கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகளே, பள்ளியில் பர்ளான தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை நடத்துவது சம்பந்தமாக பல அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நோய் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் பல விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். நாம் இந்த நேரத்தில் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டி கடைமைப்பட்டுள்ளோம்.


நமது ஊரில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொதுவாக அரசு சொன்ன கட்டுப்பாட்டில் இல்லை. பொதுவாக இந்நோய் வெளிப்படையாக தெரியக்கூடிய ஒன்றல்ல, போகப்போகத்தான் இதன் அறிகுறிகள் தென்படும். 
  
வெளியிலிருந்து வருபவர்கள் மூலமாக இந்நோய் தொற்று பலருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக இந்நோய் சிறுவர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் விரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. 

எனவே நமது ஊரில் வசிக்கக்கூடிய பலதரப்பட்ட மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டி பொதுமக்கள் சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.. 

புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளில் தொழுகை நடத்தப்படுவதில்லை, அதிராம்பட்டினத்தில் நாளை முதல் தொழுகை பள்ளிவாசலில் நடைபெறாது என்று அறிவித்துவிட்டார்கள்,அம்மாபட்டினத்தில் தொழுகை நடைபெறுவதில்லை, மேலும் அதனால் நாமும் தொழுகையை நிறுத்த வேண்டும் என்பதாக மட்டும் இல்லாமல், இது எங்களுக்கான பொறுப்பு, இதன் மீது நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற அக்கறையுடன் இஸ்லாம் காட்டும் வழிமுறை படி செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
     
நபியுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூறுகின்றோம்,   ஒருமுறை நபியவர்கள் ஒரு படையை ஒரு போருக்காக அனுப்பி வைத்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவருக்கு குளிப்பதற்கான தேவை ஏற்பட்டது. அந்த சஹாபியுடைய தலையில் ஒரு காயம் இருந்தது.  அவர் பஜ்ருடைய தொழுகை தொழ வேண்டுமென்றால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். இப்படியான சூழ்நிலையில் மிகவும் கடுமையான குளிரான அந்த நேரத்தில் சில சஹாபாக்கள்ளிடம் கேட்டபோது அவர்களும் அதே கருத்தையே சொல்லவே, வேறு வழியில்லாமல் அவர் குளித்தார்,  அதன் காரணமாக அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தி திரும்பி வந்தவுடன் நபியவர்களிடம் சொல்லப்பட்ட போது, நபி அவர்கள் சொன்ன பதில், நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவரை கொன்று விட்டீர்கள் என்று. 

   நோய் சம்பந்தமான சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் பல வழிகாட்டுதல் தந்துள்ளது.  இப்படியான சூழ்நிலைகளில் இஸ்லாம் நமக்கு வீடுகளிலேயே தொழுது கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஒழுக்க முறைகளும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 
     
ஆகவே ஜமாத் நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: பள்ளிவாசல்களை திறந்து வைக்க வேண்டாம்.. பர்ளான தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமுன் காப்போம்..! சிந்தித்து செயல்படுவோம்..!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments