கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாடு.!குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் வாழ்வுரிமை மாநாடு நேற்று இரவு 7.00 மணிக்கு நடந்தது.


இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சையது அகமது பாரூக் வரவேற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, பாதிரியார் ஜெகத் கஸ்பர், அலிகார் பல்கலைக்கழக மாணவர் பேரவை செயலாளர் ஹூசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், ஏ.எம்.யு. மாணவர் பேரவை உறுப்பினர் கவுதம், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.


மாநாட்டில் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப் கலந்து கொண்டு பேசுகையில், இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்க இங்கு வந்துள்ளேன். அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை மாற்ற தற்போது முயற்சி நடக்கிறது. அந்த திட்டம் வெற்றி பெறாது. நாம் ஒற்றுமையுடன் இருப்போம், என்றார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்துக்கும் எதிரானது. அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை நாட்டில் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. எனவே இவற்றை அமல்படுத்த கூடாது என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி கேட்டு கொள்ளப்படுகிறது.


தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் அமைதி போராட்டத்தில் பலியான 4 மாத குழந்தை முகமது ஜகானுக்காக பிரார்த்தனை செய்வது, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வலியறுத்துவது, அதுவரை ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தொடர வேண்டும். மக்களின் நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு பழைய வடிவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். அதில் சாதி வாரி கணக்கெடுப்பையும் இணைக்க வேண்டும். டெல்லி கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.


ராஜினாமா

டெல்லி சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்களித்த அ.தி.மு.க.வுக்கு இந்த மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்வது மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதன்பின்னர் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் மேடையில் இருந்த தலைவர்கள் கைகோர்த்து நின்றனர்.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேச்சு

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவை கொடிசியாவில் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேசியதாவது:-


நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு எச்சரிக்கவே இந்த மாநாடு நடத்துகிறோம். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது துப்பாக்கி சுடு நடத்தப்படுகிறது. இந்த நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் தவித்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனை திசை திருப்பவே இந்த குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. என்.ஆர்.சி.யால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் பல லட்சம் பேர் இந்து மக்கள். அவர்களுக்கு சேர்த்து தான் இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். மக்களை பிளவுப்படுத்தும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த சட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து எதிர்போம்.

டெல்லியில் அமைதியாக போராடிய மக்கள் மீது வன்முறை கையாளப்பட்டு உள்ளது. வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அமித்ஷா அமைதி காத்தார். நாட்டின் பன்முக தன்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழக அரசுக்கு ஒர் விண்ணப்பம். இந்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஒருநாளும் பின்வாங்க மாட்டோம். சரணடைய மாட்டோம். தமிழக அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கேரளா உள்பட பிற மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய பிரச்சினை

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா எம்.பி. பேசியதாவது:-

இந்திய தலைநகரம் டெல்லி தற்போது கொந்தளிப்பில் இருக்கிறது. டெல்லியில் அறவழியில் தான் போராட்டம் நடந்தது. அதனை சிலர் கலவரமாக மாற்றிவிட்டனர். நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தை யாரும் துண்டிவிடவில்லை மக்கள் தான் எழுச்சியுடன் போராடுகிறார்கள். இது இந்து, முஸ்லிம் பிரச்சினை இல்லை. இது தேசிய பிரச்சினை. இந்தியாவில் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை நிலைகுலைய வைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


இந்த மாநாட்டில் கோவை மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜஹான், பதுருதீன், காஜா, சுலைமான், பாரூக், அபுலைஸ், முஸ்தபா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சியை மாநில துணை பொதுச்செயலாளர் தைமியா தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட செயலாளர் எம்.எச். அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments